திருநெல்வேலி: பாபநாசம் அருகே மேற்குத்தொடர்ச்சி மலையில், உச்சநீர்மட்டம் 143 அடி கொண்ட பாபநாசம் காரையார் அணை, சேர்வலாறு அணை உள்ளது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் (நவம்பர் 25) முதல் பெய்துவரும் கனமழையால், நேற்றிரவு (நவம்பர் 26) முதல் தற்போதுவரை நீர்வரத்து சுமார் 12 ஆயிரம் கன அடிக்கும் மேல் வருவதால், இரு அணைகளிலிருந்தும் சுமார் 20 ஆயிரம் கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.
இதன் காரணமாக மேற்குத்தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள, ஆண்டு முழுவதும் வற்றாத அருவியான, அகஸ்தியர் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் பாபநாசம் தலையணை பகுதியிலும் வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.
வெள்ளப்பெருக்கு காரணமாக பிரசித்திப்பெற்ற காரையார் சொரிமுத்து அய்யனார் கோயிலுக்கு பக்தர்கள் செல்ல வனத் துறையினர் தடையும் விதித்துள்ளனர். மேலும் காரையார் அணைப் பகுதியில் தொடர்ந்து மழை பெய்துவருவதால், அணைக்கு நீர்வரத்து மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.
எனவே தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு மேலும் உயரக்கூடும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் யாரும் தாமிரபரணி ஆற்றில் குளிக்கவோ, வேடிக்கை பார்க்கவோ வேண்டாம் என மாவட்ட நிர்வாகம், வி.கே. புரம் நகராட்சி நிர்வாகம் ஆகியவை அறிவுறுத்தியுள்ளன.
இதையும் படிங்க: Coimbatore sexual Harrassment: கைதான ஆசிரியருக்கு காவல் நீட்டிப்பு