சென்னை சூளைமேட்டை சேர்ந்த சுவாதி என்ற இளம்பெண் 2016-ம் ஆண்டு ஜூன் 26-ம் தேதி நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் கொடூரமாக வெட்டி கொல்லப்பட்டார். அதனையடுத்து நெல்லை மாவட்டம் செங்கோட்டையை அடுத்த மீனாட்சிபுரம் என்ற கிராமத்தைச் சேர்ந்த ராம்குமார் என்ற இளைஞர் அவரது வீட்டில் வைத்து அதே ஆண்டு ஜூலை 1-ம் தேதி கைது செய்யப்பட்டார். ராம்குமார் கைது செய்யப்பட்டபோது ப்ளேடால் தனது கழுத்தை அறுத்துக்கொண்டார் என காவல்துறையினர் கூறினர். ஆனால் அவரது கழுத்தை காவல்துறையினர்தான் அறுத்தனர் என ஒரு தரப்பினர் குற்றச்சாட்டு வைத்தனர்.
கைது செய்யப்பட்ட ராம்குமார் சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டார். ஆனால், சுவற்றில் பதியப்பட்டிருக்கும் மின் வயரைக் கடித்து அவர் தற்கொலை செய்துகொண்டார் என காவல்துறை தெரிவித்தது. இருப்பினும், ராம்குமார் தற்கொலை செய்துகொள்ளவில்லை அவர் வெளியே வந்தாலோ, இல்லை உயிரோடு இருந்தாலோ சுவாதி கொலை தொடர்பாக பல உண்மைகள் வெளிவரும் என்பதால் காவல்துறையினரே அவரை கொலை செய்துவிட்டனர் என்ற பேச்சு பரவலாக பேசப்பட்டது. மேலும், ராம்குமாரின் பிரேதப் பரிசோதனை அறிக்கையிலும் பலர் பல்வேறு சந்தேகங்களை எழுப்பி இது நிச்சயம் கொலைதான் எனவும் கூறி வந்தனர். சுவாதி மற்றும் ராம்குமார் ஆகிய இரண்டு பேரின் மரணங்களும் தமிழகத்தில் மிகப்பெரிய அதிர்ச்சியையும், மர்மத்தையும் ஏற்படுத்தியது.
இதனையடுத்து ராம்குமார் மரணம் குறித்து மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்தது. இந்நிலையில், ராம்குமார் தந்தை மற்றும் உறவினர்களிடம் மனித உரிமைகள் ஆணையம் இன்று விசாரணை நடத்தி வருகிறது. ராம்குமார் மரணம் தொடர்பாக மீண்டும் விசாரணை ஆரம்பித்திருப்பதால் அவரது மரணத்தில் இருக்கும் மர்ம முடிச்சு அவிழுமா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது