திருநெல்வேலி: நெல்லை மாவட்டம், அடைமிதிப்பான்குளம் கிராமத்தில் இயங்கி வரும் வெங்கடேஸ்வரா கல்குவாரியில் பாறைகள் சரிந்து விழுந்து ஏற்பட்ட விபத்தில் ஆறுபேர் சிக்கிய நிலையில் இதுவரை 2 பேர் உயிரிழந்துள்ளனர். 2 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். மேலும் 2 பேரின் நிலை கேள்விக்குறியாகியுள்ளது. இச்சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும்அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
பொதுவாக கல்குவாரி பணி என்பது தொழிலாளர்களுக்கு மிக மிகச் சவாலான வேலையாகும். பூமிக்கு அடியில் இருக்கும் ராட்சத பாறைகளை வெடிவைத்துத் தகர்த்து கற்களாக மாற்றி, குவாரி அதிபர்கள் ஏசியில் அமர்ந்தபடி கோடிக்கணக்கில் சம்பாதிக்கின்றனர். ஆனால், சொற்ப சம்பளத்துக்குத் தொழிலாளர்கள் தங்கள் உயிரைப் பணயம் வைத்து வேலை செய்கின்றனர். கல்குவாரி அமைப்பதற்கு என்று சில விதிமுறைகள் உள்ளன.
கனிமவளம் மற்றும் சுரங்கத்துறை தான் இந்த விதிமுறைகளை வகுக்கிறது. ஆனால், விதிமுறைப்படி குவாரி நடத்தினால் கோடிகளில் சம்பாதிக்க முடியாது என்பதால் பெரும்பாலான குவாரி அதிபர்கள் அரசியல் பின்னணியோடு விதிகளை மீறி ஆபத்தான வகையில் கனிம வளங்களைச் சீரழித்து வருகின்றனர். அதன் ஒரு பகுதியாகத் தான் நெல்லை கல்குவாரி விபத்து அரங்கேறியுள்ளது.
பினாமி பெயரில் கல்குவாரி: இந்த சம்பவத்தில் சம்பந்தப்பட்ட கல்குவாரி, திசையன்விளை பகுதியைச் சேர்ந்த தொழிலதிபர் செல்வராஜ் மற்றும் அவரது மகன் குமார் என்பவருக்குச் சொந்தமானது. இதுபோன்று விதிமீறலில் ஈடுபடும் தொழிலதிபர்கள் யாரும் நேரடியாக தங்கள் பெயரில் குவாரிகளை நடத்துவதில்லை. அந்த வகையில், செல்வராஜ் தனது குவாரிக்கு சங்கரநாராயணன் என்பவரது பெயரில் உரிமம் பெற்று வைத்துள்ளார். சங்கரநாராயணன் அவரிடம் கணக்குப் பிள்ளையாக வேலை பார்த்ததாகக் கூறப்படுகிறது.
கல்குவாரியின் விதிமீறல்கள்: இங்கு சுமார் 6 ஏக்கர் பரப்பளவில் ஆங்காங்கே பாறைகளைக் குடைந்து கற்களை எடுத்து வருகின்றனர். விபத்து நடைபெற்ற இடத்தில் சுமார் 300 அடி ஆழத்திற்குப் பாறைகள் தோண்டப்பட்டுள்ளது. இங்குதான் உச்சபட்ச விதிமீறலும் அரங்கேறியுள்ளது. அதாவது பொதுவாக இதுபோன்ற குவாரிகளில் பாறைகள் தோண்டப்படும்போது நீர் மட்டத்திலிருந்து 5 மீட்டர் உயரம் வரை பாறைகள் அள்ளக் கனிம வளத்துறை அனுமதி அளிக்கும்.
இதன்மூலம் நிலத்திலிருந்து கீழ் நோக்கித் தோண்டத் தோண்டப் பள்ளம் ஏற்படுவதால், உள்ளே வாகனங்கள் மற்றும் ஆட்கள் சென்று வர ஏதுவாக வட்ட வடிவில் இந்தப் பாதைகள் அமைக்கப்பட வேண்டும். இவ்வாறு அமைக்கப்படும்போது ஒரு பாதையிலிருந்து கீழே செல்லும் மற்றொரு பாதைக்கு அதிகபட்சம் 15 அடி மட்டுமே உயரம் இருக்கும் வகையில் அமைக்க வேண்டும். ஆனால், விபத்து நடைபெற்ற குவாரியில் இந்த விதி முற்றிலும் கடைப்பிடிக்காமல் இஷ்டத்துக்கு 100 அடி வரை ஒரு பாதையில் இருந்து மறு பாதைக்கு உயரம் வைத்துள்ளனர். இதுதான் விபத்துக்கு முக்கியக் காரணம் என்று தெரியவந்துள்ளது.
அதாவது அரசின் விதிப்படி 15 அடிக்கு ஒரு பாதை அமைத்திருந்தால் மேலிருந்து பாறைகள் சரிந்து விழும்போது முதல் பாதையில் கற்கள் விழுந்து கீழ்நோக்கி கற்கள் வராமல் தடுக்கப்படும். அப்படியே கீழே சென்றாலும் அடுத்த பாதை கற்களைத் தடுத்துக்கொள்ளும். இதனால் அடி மட்டத்துக்குக் கற்கள் செல்வது தவிர்க்கப்படும். ஒருவேளை இதுபோன்ற சரிவின்போது மேல் மட்டத்திலிருந்து அடி மட்டம் வரை கற்கள் சென்றாலும் கூட 15 அடி உயரத்திற்கு அடுத்தடுத்து பாதைகள் அமைத்தால் கற்கள் சரியும் வேகத்தின் அளவு குறையும். இதனால் விபத்து முற்றிலும் தவிர்க்கப்படும்.
15 அடி இருக்க வேண்டிய உயரம் 100 அடி ஆனது:இந்நிலையில் தற்போது விபத்து நடைபெற்ற குவாரியில் முழுக்க முழுக்க விதிமீறல் நடந்து 100 அடி உயரத்துக்கு அடுத்தடுத்து பதில் அமைக்கப்பட்டிருப்பதால் மேலிருந்து சரிந்த பாறைகள் எந்தவித தடையும் இல்லாமல் நேரடியாக மளமளவெனக் கீழே கற்களை அள்ளிக்கொண்டிருந்த அப்பாவி தொழிலாளர்கள் மீது சரிந்து விழுந்தது.
இந்த குவாரிக்கு 2018ஆம் ஆண்டு முதல் 2023ஆம் ஆண்டு வரை, நெல்லை மாவட்ட கனிமவள உதவி இயக்குநர் அனுமதி அளித்துள்ளார். ஆனால், உரிமத்தில் அனுமதிக்கப்பட்ட அளவை விடக் கூடுதலாகப் பாறைகள் தோண்டப்படுவது தெரியவந்ததால் கடந்த ஏப்ரல் மாதம் குவாரியை மூட கனிமவள அலுவலர்கள் உத்தரவிட்டுள்ளனர். இருப்பினும் வழக்கம்போல் அரசியல் பின்னணி கொண்ட செல்வராஜ் மற்றும் அவரது மகன் தங்களது அரசியல் செல்வாக்கைப் பயன்படுத்தி அரசின் தடை உத்தரவை மீறி குவாரியை இயக்கி வந்துள்ளனர்.
நேற்று நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின்போது இந்த குவாரி சட்டத்திற்குப் புறம்பாகச் செயல்படுவதாகக் கனிமவள இயக்குநரே இதைத் தெரிவித்துள்ளார். சட்டத்துக்குப் புறம்பாகச் செயல்பட்டதை அவர் ஒப்புக்கொண்டாலும் கூட குவாரியில் என்னென்ன விதிமீறல் நடந்துள்ளது? அனுமதிக்கப்பட்ட அளவு எவ்வளவு? கூடுதலாக தோண்டப்பட்ட அளவு எவ்வளவு? போன்ற விவரங்கள் குறித்து கடைசிவரை அலுவலர்கள் மற்றும் அமைச்சர் வாய் திறக்கவில்லை.
எனவே, வழக்கம் போல் இந்த விஷயத்திலும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய நியாயம் கிடைக்குமா என்பது கேள்விக்குறி ஆகியுள்ளது. அலுவலர்களும் வெறும் உத்தரவு போட்டதோடு நின்றுவிடாமல் குவாரியை உடனே மூடியிருந்தால் இந்த விபத்தைத் தடுத்திருக்கலாம். இந்த விபத்துக்கு அலுவலர்கள் கவனக்குறைவு காரணம் என்பது மறுக்க முடியாத உண்மையாக இருக்கிறது. குவாரி உரிமைதாரரான சங்கரநாராயணன் மற்றும் மேலாளர் செபஸ்டின் இருவரை காவல் துறை கைது செய்துள்ளனர். ஆனால், குவாரியின் உரிமையாளரான செல்வராஜ் மற்றும் அவரது மகன் குமார் இருவரும் தற்போது வரை கைது செய்யப்படவில்லை.
இதுகுறித்து மாவட்ட எஸ்பி சரவணனிடம் கேட்டபோது, ’அவர்கள் இருவரும் கைப்பேசியை சுவிட்ச் ஆஃப் செய்து விட்டுத் தலைமறைவாகி விட்டதாக’ தெரிவிக்கிறார். அவர்கள் மீது வழக்கு மட்டுமே பதிவு செய்துள்ளனர். பல்வேறு தொழில்நுட்பம் தெரிந்த குற்றவாளிகளைக் கூட அதே தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி விரட்டிப் பிடிக்கும் தமிழ்நாடு காவல் துறைக்கு 70 வயதைக் கடந்த செல்வராஜைக் கண்டுபிடிப்பது அவ்வளவு பெரிய சவாலா என்ற கேள்விக்குறியும் இங்கு எழுகிறது.
உண்மையாகவே இருவரும் தலைமறைவானார்களா அல்லது அரசியல் செல்வாக்கால் தலைமறைவாக்கப்பட்டார்களா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. செல்வராஜ் காங்கிரஸ் கட்சி பிரமுகர் என்றும்; அதனால்தான் அவர் மீது நடவடிக்கை தாமதமாகிறது என்றும் பொதுமக்கள் மத்தியில் குற்றச்சாட்டு உள்ளது. ஆனால் இதுகுறித்து நேற்று நெல்லை வந்த தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரியிடம் கேட்டபோது அவர் காங்கிரஸ் கட்சியைச் சார்ந்தவரா என்பது தனக்குத் தெரியாது என்று பதில் அளித்துவிட்டார்.
இதுமட்டுமல்லாமல் நெல்லையில் மேலும் பல குவாரிகள் உரிமத்தில் பெறப்பட்ட அளவைவிடக் கூடுதல் அளவு பாறைகளைத் தோண்டி எடுத்து வருகின்றனர். இதனால் மேலும் பல உயிர்கள் காவு போகும் அபாய சூழல் இருந்து வருகிறது. நெல்லை மாவட்டத்தில் மொத்தம் 52 குவாரிகள் செயல்பாட்டில் இருப்பதாகவும் அதில் பல்வேறு காரணங்களுக்காகக் கடந்த 6 மாதத்தில் 6 குவாரிகள் மூடப்பட்டதாகவும் மாவட்ட ஆட்சியர் விஷ்ணு தெரிவித்தார்.
எனவே, இனியும் காலம் தாழ்த்தாமல் மிக வேகமாகச் செயல்பட்டு விதி மீறல் எழுந்துள்ள அனைத்து குவாரிகளையும் கண்காணித்து அவற்றை உடனடியாக மூட வேண்டும் என்பதே நெல்லை மாவட்ட மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
இதையும் படிங்க:நெல்லை குவாரி விபத்து மேலும் ஒருவர் பலி!- மீதமுள்ள இருவரின் நிலை என்ன?