திருநெல்வேலி:நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த பிரபல தொழிலதிபர் செல்வராஜ் மற்றும் அவரது மகன் குமார் இருவருக்கும் சொந்தமாக பொன்னாக்குடி அடுத்த அடைமிதிப்பான் குளம் கிராமத்தில் வெங்கடேஸ்வரா என்ற பெயரில் கல் குவாரி இயங்கி வருகிறது. இங்கு நாள்தோறும் வெடி வைத்து பாறைகள் தகர்த்தப்பட்டு கற்கள் எடுக்கப்படும்.
அந்த வகையில் கடந்த மே 14 நள்ளிரவு மணி சுமார் 11.30 மணி அளவில் வழக்கம்போல் சுமார் 300 அடி ஆழம் கொண்ட குவாரிக்குள் ஹிட்டாச்சி இயந்திரம் மூலம் லாரிகளில் கற்களை ஏற்றும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது கண்ணிமைக்கும் நேரத்தில் 300 அடி உயரத்திலிருந்து பாறைகள் மளமளவென சரிந்து விழுந்தது. இதில் அனைவரும் இடிபாடுகளுக்குள் சிக்கிக் கொண்டனர்.
இருவர் உயிருடன் மீட்பு: உடனடியாக தீயணைப்புத் துறையினர் காவல் துறையினர் இணைந்து மீட்புப் பணியை முடுக்கி விட்டனர். அதிஷ்டவசமாக ஆறு பேரில் முருகன் மற்றும் விஜய் ஆகிய இருவரும் வெளிப்புறமாக மாட்டிக்கொண்டதால் உயிருடன் மீட்கப்பட்டனர்.
எஞ்சிய ராஜேந்திரன் செல்வகுமார் செல்வம் மற்றொரு முருகன் ஆகிய நான்கு பேரையும் மீட்கும் பணிகள் நடைபெற்ற நிலையில், செல்வம் மட்டும் பாறைகளுக்கு மேலே தலை மற்றும் கையை ஆட்டியபடி தன்னை காப்பாற்றும்படி கூச்சலிட்டார். கடும் போராட்டத்திற்கு பிறகு அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் சிகிச்சை பலன் இன்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
தொடர்ந்து எஞ்சிய 3 பேரை மீட்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. மாவட்ட ஆட்சியர் விஷ்ணு சம்பவ இடத்தில் முகாமிட்டு மீட்பு பணிகளை பார்வையிடுகிறார். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் நெல்லை சரக டிஐஜி பிரவேஷ்குமார், தென் மண்டல ஐஜி என ஒட்டுமொத்த காவல்துறையும் களமிறங்கியுள்ளது.
தொடர்ந்து பாறைகள் சரிவு ஏற்படுவதால் தேசிய பேரிடர் குழுவின் உதவி கோரப்பட்டு 30 பேர் கொண்ட குழுவினர் மீட்பு பணியில் இறங்கினர். இருப்பினும் விபத்து நடைபெற்று கிட்டத்தட்ட 48 மணி நேரம் ஆகும் நிலையில் இதுவரை விபத்தில் சிக்கிய 3 பேரின் கதி என்ன என்பது தெரியவில்லை. மூன்று பேரில் ஒருவர் மட்டும் அடையாளம் காணப்பட்டு அவரை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
அடுத்தடுத்து உருளும் பாறைகள் : ஆனாலும் அடுத்தடுத்து பாறைகள் சரிந்து கீழே விழுவதால் மீட்புக்குழுவினர் அவரை நெருங்க முடியவில்லை. அதிகளவில் வீரர்களை இறக்கி மீட்பு பணியை முடுக்கிவிடலாம் என்று திட்டமிட்ட போது பாறைகள் தொடர்ந்து சரிவதால் மேலும் பலர் விபத்தில் சிக்கும் அபாயம் நேரிடும் சூழல் நிலவுகிறது. இதனால் கண் முன்னே சரிந்து கிடக்கும் மனித உயிர்களைக் காப்பாற்ற முடியாமல் வீரர்கள் திணறி வருகின்றனர்.
வருவாய் துறை செயலாளர் கனிமவளத்துறை இயக்குநர் என அதிகாரிகள் பட்டாளமும் நெல்லையில் முகாமிட்டுள்ளது. இருப்பினும் மூன்று பேர் கதி என்ன என்பது தற்போது வரை தெரியவில்லை. தனது மகன்களுக்கு என்ன ஆனது என்று தெரியாமல் மூன்று பேரின் பெற்றோர்களும் பரிதவித்து வருகின்றனர். இதற்கிடையில் தொடர்ந்து பாறைகள் சரியும்பட்சத்தில் மீட்புப் பணிகளை நிறுத்திவிடும் சூழலும் நிலவுகிறது இதனால் மூன்று பேரையும் மீட்பதில் சிக்கல் நீடித்து வந்தது.
பலி எண்ணிக்கை உயர்வு:திங்கட்கிழமை காலை 7 மணி முதல் மீட்பு பணி தொடங்கி நடந்து வந்தது, மதியம் சுமார் 1.45 மணி அளவில் இடிபாடுகளில் சிக்கிய நிலையில் ஒருவர் உடல் கண்டுபிடிக்கப்பட்டது. உடலை மீட்க முயற்சித்த போது மீண்டும் கற்கள் சரிந்து விழுந்ததால் 2 மணி நேரம் மீட்பு பணி நிறுத்தப்பட்டது.
பின்னர் தொடர்ந்து தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் மீட்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது லாரியின் அருகில் இடிபாடுகளில் சிக்கி கிடந்தவரை இரவு 10.45 மணி அளவில் 47 மணி நேரத்திற்கு பின் சடலமாக மீட்டனர், அவரை அவரது உறவினர்கள் அடையாளம் காட்டிய நிலையில் நான்காவதாக சடலமாக மீட்கப்பட்டவர் பெயர் முருகன் என்பதும் நாங்குநேரி அருகே உள்ள ஆயர்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர். லாரி கிளீனராக வேலை செய்துவந்ததும் தெரியவந்தது. இன்னும் இருவர் இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளனர்.
இதையும் படிங்க:நெல்லை கல்குவாரி விபத்து - சிகிச்சைப்பெற்று வருவோரிடம் கனிமொழி எம்.பி., நேரில் நலம் விசாரிப்பு!