திருநெல்வேலி: அரசு மருத்துவமனையில் இருந்து தப்பி ஓடிய கரோனா நோயாளியை பிடித்து காவல் துறையினர் மருத்துவமனையில் சேர்த்தனர்.
திருநெல்வேலி மாவட்டம் நரிக்குறவர் காலனியைச் சேர்ந்த ரேகா என்ற பெண் கரோனாவால் பாதிக்கப்பட்டு, அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்துள்ளார். ஆனால் அவரை பார்ப்பதற்கு அவரது கணவர் உள்பட உறவினர்கள் யாரும் மருத்துவமனைக்கு செல்லாததால், ரேகா மன அழுத்தத்தில் இருந்ததாக தெரிகிறது.
இவ்வேளையில் ஆகஸ்ட் 27ஆம் தேதி ரேகா மருத்துவமனையில் இருந்து தப்பி ஓடியதாக தகவல் வெளியானது. இதற்கிடையில் நாங்குநேரியில் வைத்து காவல் துறையினர் ரேகாவை பிடித்துள்ளனர். பின்னர் அவரது கணவரை வரவழைத்து அவருடன் ரேகாவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
இது குறித்து அரசு மருத்துவமனை நிர்வாகத்திடம் கேட்டபோது, “உறவினர்களின் ஆதரவு இல்லாமல் ரேகா தனது கைக்குழந்தையுடன் சிகிச்சைக்கு வந்தார். அவருக்கு லேசான கண் பார்வை குறைபாடு உள்ளது. சிகிச்சை பெற்று வந்த நிலையில் திடீரென அவர் மருத்துவமனையில் இருந்து யாருக்கும் தெரியாமல் வெளியேறி விட்டார்” என்றனர்.
நோயாளி தப்பி ஓடிய சம்பவம் குறித்து ஒரு மருத்துவரிடம் நிர்வாகம் விசாரணை மேற்கொண்டுவருகிறது. மேலும், மருத்துவமனை நிர்வாகம் அளித்த புகாரின்பேரில், கண் பார்வை குறைபாடு உள்ள ரேகா திருநெல்வேலி நகரத்திலிருந்து, 30 கிலோமீட்டர் தொலைவிலுள்ள நாங்குநேரிக்கு எப்படி சென்றார் என்பது குறித்தும் அவரை யாராவது கடத்தி சென்றார்களா என்பது குறித்தும் பாளையங்கோட்டை காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.