நெல்லை மாவட்டத்தில் கரோனோ தடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக பொதுமக்களுக்கு இலவச முகக்கவசம் வழங்கும் நிகழ்ச்சி, வண்ணாரப்பேட்டை பகுதியில் நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர் விஷ்ணு கலந்து கொண்டு பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளுக்கு முகக்கவசங்களை இலவசமாக வழங்கினார். அப்போது உணவகங்கள், துணிக்கடைகள், தேநீர் கடைகள் ஆகியவற்றுக்குள் திடீரென நுழைந்த மாவட்ட ஆட்சியர், வியாபாரிகள் மற்றும் வாடிக்கையாளர்கள் முகக் கவசம் அணிந்துள்ளார்களா என்று ஆய்வு செய்தார்.
அவ்வாறு அணியாதவர்களிடம் அறிவுரை கூறிய அவர், இலவச முகக்கவசத்தையும் வழங்கினார். மேலும், அங்கிருந்த கடை நிர்வாகிகளிடம், இதுதான் கடைசி வாய்ப்பு இனிமேல் முகக்கவசம் அணியாவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்தார். பின்னர் பேருந்து நிறுத்தத்தில் நின்றிருந்த பொதுமக்கள் மற்றும் ஆட்டோ ஓட்டுநர்களுக்கும் இலவச முகக்கவசங்களை ஆட்சியர் வழங்கினார். மாவட்ட ஆட்சியரே களத்தில் இறங்கி பரபரப்பாக கடைகள் மற்றும் பொது மக்களிடம் நேரடியாக சென்று முகக்கவசம் வழங்கியது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஆட்சியர் விஷ்ணு, “ தொற்றிலிருந்து மக்களை பாதுகாக்க இந்த விழிப்புணர்வு நடவடிக்கையை எடுத்துள்ளோம். முகக்கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதிக்க அரசாணையில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மக்கள் நல்ல முறையில் ஒத்துழைத்தால் அபராதமோ தண்டனையோ வழங்கப்படாது “ என்றார்.
இதையும் படிங்க: தொழிலதிபர் வைகுண்டராஜனுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு!