திருநெல்வேலி மாவட்டம் வடக்கு தாழையூத்தை சேர்ந்த கட்டட ஒப்பந்ததாரர் கண்ணன் என்பவரை கடந்த 12ஆம் தேதி கும்பல் ஒன்று சரமாரியாக வெட்டி கொலை செய்தது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
பாளையங்கோட்டை மத்திய சிறையில் இரண்டு மாதங்களுக்கு முன்பு கைதி முத்து மனோ என்பவர் சக கைதிகளால் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு பழிக்குப்பழி வாங்கும் விதமாக முத்து மனோ தரப்பைச் சேர்ந்த கும்பல் தான் கண்ணனை கொலை செய்ததாக கூறப்பட்டது.
இதையடுத்து தாழையூத்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தனிப்படை அமைத்து குற்றவாளிகளை தேடி வந்தனர் .இந்நிலையில் வாகை குளத்தைச் சேர்ந்த நலத்துரை(22) சங்கிலிப் பூதத்தான்(20) குருச்சின்(22) மற்றும் மேலப்பாளையத்தை சேர்ந்த அம்மு வெங்கடேஷ்(22) ஆகிய 4 பேரை காவல்துறையினர் கைது செய்தனர் .
இவர்களிடம் நடத்திய விசாரணையில் பாளை சிறையில் கைதி முத்து மனோ கொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு பழிக்குப்பழி வாங்கும் விதமாக தான் கண்ணனை கொலை செய்ததாக ஒப்புக்கொண்டனர். அதாவது முத்து மனோ கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் தொடர்புடைய ஏழு நபர்களில் ஜேக்கப் என்வரின் நெருங்கிய உறவினர் தான் கண்ணன்.
இதற்கிடையில் கண்ணன் கொலை சம்பவத்தில் தொடர்புடைய மேலும் 10 பேர் களக்காடு அருகே மலைப் பகுதியில் பதுங்கி இருப்பதாக காவல் துறைக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, அந்தப் பகுதிகளில் காவல்துறையினர் ஆளில்லா விமானம் மூலம் சோதனை நடத்தினர்.