திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் அருகே உள்ள கோட்டையடியில் அம்மன் கோயில் உள்ளது. இதன் பின்புறம் அமைந்துள்ள குடிநீர் அடிபம்பு கடந்த சில மாதங்களுக்கு முன்பு போடப்பட்ட நிலையில் சில வாரங்களிலேயே ஐந்து முறை பழுதாகிவிட்டது. இது குறித்து கோட்டையடி இளைஞர்கள் வள்ளியூர் பஞ்சாயத்தில் பல முறை புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது. எனவே உடனடியாக வள்ளியூர் பஞ்சாயத்து நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். நடவடிக்கை எடுக்காவிட்டால் பொதுமக்கள் இளைஞர்கள் சார்பில் போராட்டம் நடத்தப்படும் என உள்ளூர் இளைஞர்கள் தெரிவித்தனர்.
இந்த தகவல் சமூக வலைதளங்களிலும் பரவியது. இது குறித்து அறிந்த ராதாபுரம் சட்டப்பேரவை உறுப்பினர் இன்பதுரை வள்ளியூர் பேரூராட்சி அலுவலர்களை அழைத்துக்கொண்டு சம்மந்தப்பட்ட இடத்திற்கு இன்று(ஜூலை 13) நேரில் சென்று பழுதாகிக் கிடக்கும் ஆழ்துளை கிணறை உடனடியாக சீரமைக்க நடவடிக்கை எடுத்தார். பழுது நீக்கப்படும் வரை இன்பதுரை எம்எல்ஏ, உடன் இருந்து பணிகளை துரிதப்படுத்தினார்.
பின்னர் சில மணி நேரத்தில் பழுது சரி செய்யப்பட்டு அடிபம்பு மூலம் பொதுமக்களுக்கு குடிநீர் விநியோகிக்கப்பட்டது. எம்எல்ஏவின் இந்த செயல்பாட்டை அப்பகுதி பொதுமக்கள் வெகுவாக பாராட்டினார்கள்.