திருநெல்வேலி:நெல்லை மாவட்டம், மூலைக்கரைப்பட்டி அருகே உள்ள எடுப்பல் என்ற கிராமத்தில் ஊய்காட்டு சுடலை ஆண்டவர் கோயில் கொடை விழா கடந்த வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 26) நடைபெற்றது. இரவில் நடக்கும் சாமக்கொடையை பார்ப்பதற்காக அப்பகுதியைச்சேர்ந்த ஆண்கள் மற்றும் பெண்கள் என சுமார் 200க்கும் மேற்பட்டவர்கள் சென்றுள்ளனர். கோயிலைச்சுற்றி திரும்பும் இடமெல்லாம் பளீச்சிடும் வகையில் எல்.இ.டி விளக்குகள் எரிந்து கொண்டிருந்தது.
அங்கு வைக்கப்பட்ட அனைத்து விளக்குகளும் அதிக ஒளி உமிழும் எல்.இ.டி விளக்குகள் என்பதால் அங்கிருந்த அனைவருக்கும் திடீரென கண் கூச்சம் ஏற்பட்டு, கண்ணைத் திறக்க முடியாத அளவுக்கு நிலைமை தீவிரமாகியுள்ளது. அனைவரும் பதறி அடித்துக்கொண்டு வீட்டிற்குச்சென்ற நிலையில் மறுநாள் கண்களைத்திறக்க முடியாமல் கண் எரிச்சல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து மூலைக்கரைப்பட்டி அரசு மருத்துவமனை மருத்துவர் நேரில் சென்று ஆய்வு செய்தார்.
தொடர்ந்து தற்போது நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையின் கண் மருத்துவப்பிரிவு மருத்துவர்கள் எடுப்பல் கிராமத்திற்குச் சென்று, கிராம மக்களின் கண்பார்வை குறித்து ஆய்வு செய்ய உள்ளனர்.
இதுகுறித்து கண்பார்வையால் பாதிக்கப்பட்ட நாட்டாமை ஜெயபால் கூறும்போதும், ‘கொடை பார்க்க சென்ற இடத்தில் அதிகப்படியான ஒளி வெளிச்சத்தில் கட்டப்பட்ட எல்இடி விளக்குகளால் கண் பார்வை கூச்சம் ஏற்பட்டு, மறுநாள் காலை கண்களைத் திறக்க முடியாமல் கண்ணில் இருந்து நீர் வடிகின்றது.
இதனால் மருத்துவமனைக்குச் சென்று பரிசோதனை செய்ததில் இன்று நெல்லையிலிருந்து மருத்துவர்கள் வருகை தருவதாக தகவல் தந்துள்ளார்கள்’ எனக் கூறினார்.
இதையும் படிங்க:தந்தையின் அஸ்திக்காக இரண்டு ஆண்டுகளாகக் காத்திருந்த பிள்ளைகள்.., பத்திரமாக சேர்த்த இஸ்லாமிய இளம்பெண்...