இந்தியாவில் கரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்தும் விதமாக அனைத்து மாநிலங்களிலும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி தமிழகத்தின் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்ததுடன் அனைத்து மாவட்ட எல்லைகளும் முடக்கப்பட்டுள்ளது.
அத்தியாவசிய தேவைகள் தவிர எதற்காகவும் பொதுமக்கள் வெளியே வரக்கூடாது எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இரண்டாம் நாளான இன்று திருநெல்வேலி மாவட்டத்தில் சாலையில் இருசக்கர வாகனங்களின் எண்ணிக்கை அதிகமாக காணப்பட்டன.
இதனை தவிர்க்கும் விதமாக காவல்துறையினர் கரோனா பாதிப்பை தொடர்ந்து எடுத்துக்கூறி வீட்டிலேயே இருக்குமாறு கண்டித்து வருகின்றனர். அதனையும் மீறி வாகனங்கள் வந்த வண்ணம் இருந்ததால் காவல்துறையினர் இருசக்கர வாகனங்களுக்கு அபராதம் விதித்தனர்.
அதோடு பல காரணங்களை கூறி செல்ல முயற்சித்தவர்களிடம் ஒரே ஒரு திருக்குறளை கூறிவிட்டு செல்லுமாறு நூதன தண்டனை அளித்தனர். சிலர் சொல்லி சென்றனர். சிலர் திருக்குறள் தெரியாததால் திரும்பிச் சென்றனர்.