திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை பெருமாள்புரம் அருகே ஸ்ரீநிவாச நகரைச் சேர்ந்தவர் சுரேந்தர்.
இவரை கடந்த 9ஆம் தேதி அந்தோணி என்ற நபர் செல்போனில் தொடர்பு கொண்டு, 'தான் உங்கள் நண்பர்' என்றும்; பல ஆண்டுகள் கழித்து உங்களைப் பார்ப்பதற்கு ஆவலாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
இதனை நம்பிய சுரேந்தர் அந்தோணியை நேரில் பார்க்க சம்மதித்துள்ளார். இதையடுத்து, பாளையங்கோட்டை 4 வழிச்சாலைக்கு அருகில் வரும்படி அந்தோணி கூறியதையடுத்து சுரேந்தர் கடந்த 9ஆம் தேதி அங்கு சென்றுள்ளார்.
அப்போது, அந்தோணி, அவரது நண்பர்களான வள்ளிநாயகம், முத்து கிருஷ்ணன் ஆகிய 3 பேருடன் சுரேந்தரிடம் அறிமுகம் ஆகியுள்ளனர்.
பின்னர் திடீரென மூவரும் சுரேந்தரை கத்தியைக்காட்டி மிரட்டி, அவர் வைத்திருந்த செல்போன் மற்றும் 700 ரூபாய் ரொக்கப்பணம், ஏடிஎம் கார்டு ஆகியவற்றை பறித்துக்கொண்டு, அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.
இதுகுறித்து பெருமாள்புரம் காவல் நிலையத்தில் சுரேந்தர் புகார் அளித்தார். அதனடிப்படையில், காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து ஆய்வாளர் ஜெயந்தி தலைமையிலான காவலர்கள் தப்பி ஓடிய குற்றவாளிகளை தேடி வந்தனர்.
இந்நிலையில், பெருமாள்புரம் பகுதியில் பதுங்கியிருந்த அந்தோணி, வள்ளிநாயகம், முத்து கிருஷ்ணன் ஆகிய மூவரையும் காவல் துறையினர் நேற்று(செப்.16) கைது செய்து சிறையில் அடைத்தனர்.
நண்பர்கள் தொனியில் பேசி பணம் பறிக்கும் கும்பலால் அப்பகுதி மக்களிடையே பீதி ஏற்பட்டுள்ளது.