திருநெல்வேலி: திருநெல்வேலி தொகுதியில் போட்டியிட்ட பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன், திமுக வேட்பாளர் ஏ.எல்.எஸ்.லட்சுமணனை விட 23,107 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றிபெற்றார்.
மாவட்டத்தில் மொத்தமாக அம்பாசமுத்திரம், பாளையங்கோட்டை, நாங்குநேரி, ராதாபுரம் ஆகிய 5 சட்டப்பேரவை தொகுதிகள் உள்ளன. இதில் பதிவான வாக்குகள் அரசு பொறியியல் கல்லூரியில் எண்ணப்பட்டன.
திருநெல்வேலி தொகுதியில் 30 சுற்றுகளாகவும், நாங்குநேரி தொகுதியில் 29 சுற்றுகளாகவும், பாளையங்கோட்டையில் 28 சுற்றுகளாகவும், ராதாபுரத்தில் 27 சுற்றுகளாகவும், அம்பாசமுத்திரத்தில் 26 சுற்றுகளாகவும் வாக்குகள் எண்ணப்பட்டன. இதில் திருநெல்வேலி தொகுதியில் முதல் சுற்றில் இருந்தே பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் முன்னிலை வகித்து வந்தார்.
அதேபோல், அம்பாசமுத்திரம் தொகுதியில் அதிமுக வேட்பாளர் இசக்கி சுப்பையா, பாளையங்கோட்டை தொகுதியில் திமுக வேட்பாளர் அப்துல் வகாப் ஆகியோரும் முதல் சுற்றில் இருந்தே தொடர்ந்து முன்னிலை வகித்து வந்தனர்.
நாங்குநேரி தொகுதியில் முதலில் அதிமுக வேட்பாளர் கணேசராஜா முன்னிலை வகித்தார். பின்னர் அடுத்தடுத்து எண்ணப்பட்ட சுற்றுகளில் காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரன் தொடர்ந்து முன்னிலை வகித்தார். அதேபோல் ராதாபுரம் தொகுதியில் அதிமுக வேட்பாளர் இன்பதுரைக்கும், திமுக வேட்பாளர் அப்பாவுக்கும் இடையே கடும் போட்டி நிலவி வந்தது. இருவரும் மாறி மாறி முன்னிலை வகித்து வந்தனர். இருப்பினும் கடைசி சுற்றில் திமுக வேட்பாளர் அப்பாவு அதிமுக வேட்பாளர் இன்பதுரையை விட 5925 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார்.
திருநெல்வேலி தொகுதியில் பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட திமுக வேட்பாளர் ஏ.எல்.எஸ். லட்சுமணனை விட 23,107 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார். இதன்மூலம் மாவட்டத்தில் முதல் முறையாக தாமரை சின்னம் தனது முத்திரைப் பதித்துள்ளது. மேலும் அம்பாசமுத்திரம் தொகுதி அதிமுக வேட்பாளர் இசக்கி சுப்பையா தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட திமுக வேட்பாளர் ஆவுடையப்பனை விட 16,915 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி வாகை சூடினார்.
பாளையங்கோட்டை தொகுதி திமுக வேட்பாளர் அப்துல் வகாப் தன்னை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் ஜெரால்டை விட 52,141 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார். மேலும், நாங்குநேரி தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரன் தன்னை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் கணேசராஜாவை விட வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி வாகை சூடினார்.
வெற்றி பெற்ற வேட்பாளர்கள் அந்தந்த தேர்தல் நடத்தும் அலுவலர்களிடம் சான்றிதழ்களை பெற்றுக் கொண்டனர். அம்பாசமுத்திரம் தொகுதி அதிமுக வேட்பாளர் இசக்கி சுப்பையா மட்டும் உடல்நலக்குறைவால் வாக்கு எண்ணும் மையத்துக்கு வரவில்லை. அதனால் அவர் சார்பில் கட்சி நிர்வாகிகள் சான்றிதழை பெற்றுக் கொண்டனர்.
மூன்றாவது இடம் பிடித்த நாம் தமிழர்
ஐந்து தொகுதிகளிலும் நடந்துமுடிந்த வாக்கு எண்ணிக்கையில், நாம் தமிழர் கட்சி மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது. இதேபோல் அம்பாசமுத்திரம் தொகுதியில் போட்டியிட்ட காவல் அலுவலர் வெள்ளத்துரையின் மனைவி ராணி ரஞ்சிதம் பெருவாரியான வாக்குகளைப்பெற்று அதிமுக வேட்பாளருக்கு நெருக்கடி கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர் மொத்தம் 4191 வாக்குகள் மட்டுமே பெற்று அமமுகவினரை அதிர்ச்சியில் ஆழ்த்தினார்.
மேலும், பாளையங்கோட்டை தொகுதியில் அமமுக சார்பில் எஸ்டிபிஐ கட்சி மாநில தலைவர் நெல்லை முபாரக் குக்கர் சின்னத்தில் போட்டியிட்டதால் அவரும் பெருவாரியான வாக்குகள் பெற்று திமுக வேட்பாளர் அப்துல் வகாப்பிற்க்கு நெருக்கடி கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் திமுக வேட்பாளர் அப்துல் வகாப் ஆரம்பம் முதல் கடைசி வரை அதிக வாக்கு வித்தியாசத்தில் முன்னிலை பெற்று இறுதியாக 52,141 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி வாகை சூடி, பாளையங்கோட்டை திமுகவின் கோட்டை என்பதை நிரூபித்துள்ளார்.
ராதாபுரம் தொகுதியில் 2016 தேர்தலின்போது மிகக்குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவிய அப்பாவு, இந்த முறை 5925 வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுகவை வேட்பாளர் இன்பதுரையை தோற்கடித்துள்ளார். கடந்த தேர்தல் முடிவில் முறைகேடுகள் நடந்திருப்பதாக அப்பாவு தொடர்ந்த வழக்கு, தற்போது வரை நிலுவையில் இருந்து வருகிறது. இந்த சூழலில் தற்போது நடைபெற்ற தேர்தலில் அப்பாவு வெற்றி பெற்றிருப்பது கட்சியினரிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.