திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அம்பாசமுத்திரம், திருநெல்வேலி, பாளையங்கோட்டை, ராதாபுரம், நாங்குநேரி தொகுதிகளில் போட்டியிடும் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து, திமுக தலைவர் ஸ்டாலின் நெல்லை டவுன் வாகையடி முக்கு பகுதியில் திறந்த வேனில் நின்றபடி பரப்புரை மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், ”எடப்பாடி பழனிசாமி ஊர்ந்து சென்று முதலமைச்சர் ஆனதை நான் பல இடங்களில் பேசியுள்ளேன். ஏன் நீங்களே அதை பார்த்திருப்பீர்கள். ஆனால், ஊர்ந்து செல்ல நான் என்ன பாம்பா பல்லியா என்று முதலமைச்சர் கேட்டுள்ளார். பழனிசாமி சாதாரண பல்லியோ, பாம்போ அல்ல. அவர் ஒரு விஷப்பாம்பு. விஷத்தை விட பெரியது துரோகம். அதைச் செய்தவர் தான் இந்த எடப்பாடி பழனிசாமி.
தேர்தல் வந்தவுடன் எல்லா போராட்ட வழக்குகளையும் வாபஸ் பெற்றதாக முதலமைச்சர் கூறுகிறார். ஆனால் கூடங்குளம் போராட்டத்தின் போது போடப்பட்ட தேசத்துரோக வழக்குகளை ஏன் வாபஸ் வாங்கவில்லை. திமுக ஆட்சிக்கு வந்தவுடன் கூடங்குளம் போராட்ட வழக்குகள் அனைத்தும் வாபஸ் வாங்கப்படும். திமுக ஆட்சியில் நிலமில்லாத ஏழைகளுக்கு நிலம் கொடுப்பதாக சொல்லி நிலம் கொடுக்கவில்லை என முதல்வர் கூறுகிறார். நான் ஆதாரத்தோடு கூறுகிறேன். 2006ம் ஆண்டு ஒரு லட்சத்து 89 ஆயிரத்து 750 ஏக்கர் நிலத்தை, ஒரு லட்சத்து 50 ஆயிரத்து 559 விவசாயிகளுக்கு வழங்கியுள்ளோம். குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் என்று அதிமுக தேர்தல் அறிக்கை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் ஒரு கோடியே 97 லட்சம் குடும்ப அட்டைகள் உள்ளன. இவர்கள் அனைவருக்கும் வேலை கொடுக்க முடியுமா” என்றார்.
இதையும் படிங்க: 10 ஆண்டுகள் வனவாசம் சென்றும் திமுக திருந்தவில்லை!