திருநெல்வேலி: காவல்துறையில் குற்றங்களை தடுக்க பல்வேறு நவீன யுக்திகளை கையாண்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்களுக்கு உடலோடு கூடிய கேமரா வழங்கும் புதிய திட்டம் (கேமரா பொருத்தப்பட்ட அதிநவீன ஜாக்கெட்) சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது.
இந்த நிலையில், திருநெல்வேலி மாநகர காவல்துறையில் பணிபுரியும் 33 காவலர்களுக்கு உடலோடு கூடிய கேமரா வழங்கும் திட்டம் இன்று தொடங்கப்பட்டது. மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் துணை ஆணையர் சீனிவாசன், காவலர்களுக்கு உடலோடு கூடிய கேமராவை அவர்களின் சட்டையில் பொருத்திவிட்டார்.
பின்னர், அவற்றின் பயன்பாடு குறித்து காவலர்களுக்கு விளக்கமளித்தார். இதுகுறித்து அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், ரோந்து காவலர்கள் மற்றும் போக்குவரத்து காவலர்கள் 33 பேருக்கு இந்த உடலோடு கூடிய கேமரா வழங்கப்பட்டுள்ளது.
அவர்கள் களத்தில் பணிபுரியும்போது நடைபெறும் குற்றச்சம்பவங்களை பதிவு செய்து விசாரணையின்போது பயன்படும் வகையிலும், குற்றச்சம்பவங்களை தடுக்கும் வகையிலும் இந்தக் கேமரா வழங்கப்பட்டுள்ளது என்றார் துணை ஆணையர் சீனிவாசன்.
இதையும் படிங்க: நெல்லை தொகுதியில் பாஜக போட்டி? எல்.முருகன் சூசக தகவல்!