காதலுக்கு கண் இல்லை என்று பலரும் கூறுவதுண்டு. அதற்கு காரணம் உண்மையான காதல் உருவத்தை பார்த்து வருவதல்ல உள்ளத்தை உணர்ந்து வருவது என்பதே. அப்படி இருமனங்கள் இடையே மலர்ந்த காதலுக்கு, இந்த சமூகத்தினால் ஏற்பட்ட கொடுமையை விளக்குகிறது, இந்த செய்தி தொகுப்பு. திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் அருகே உள்ள கேசவனேரியை சேர்ந்தவர் பிரகாஷ்(25), சென்னையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். இவரும் வள்ளியம்மாள்புரத்தை சேர்ந்த திவ்யாவும் (22) ஐந்து வருடங்களாக காதலித்து வந்தனர்.
இருவரும் ஒரே சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் இரு வீட்டார் இடையிலும் எதிர்ப்புகள் ஏற்படவில்லை. இந்த நிலையில் 2 வருடங்களுக்கு முன்பு பிரகாஷ் சென்னையில் இருந்து இருசக்கர வாகனத்தில் ஊர் திரும்பும் போது விபத்து ஏற்பட்டு முதுகு தண்டுவட பாதிப்பால் அவரது இரண்டு கால்களும் செயல் இழந்துவிட்டன.
எழுந்து நடமாட முடியாத நிலையிலும், இவர்களது காதல் இடையூறு இன்றி தொடர்ந்துள்ளது. ஆனால் சில ஆண்டுகளுக்கு முன்பு எதிர்ப்பு தெரிவிக்காத திவ்யாவின் பெற்றோர், விபத்துக்கு பின் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்த எதிர்ப்புகளை எல்லாம் மீறி இருவரும் கடந்த செப். 20 ஆம் தேதி பிரகாஷின் வீட்டில் அவரது குடும்பத்தார் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டனர். இதனை அறிந்த திவ்யாவின் பெற்றோர், பிரகாஷின் வீட்டிற்கு இன்று (செப்.29) நேரில் சென்று தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
அப்போது தன்னை சரமாரியாக தாக்கியும், வீட்டிலிருந்த பொருட்களை அடித்து நொறுக்கியும், திவ்யாவை தரதரவென இழுத்துச் சென்றதாகவும் பிரகாஷ் கூறுகிறார். அதன்பின் வள்ளியூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த பிரகாஷ் வள்ளியூர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார். அதில் திருமணமாகிய எட்டு நாட்களுக்குள் மனைவியை பிரித்து சென்ற அவரது குடும்பத்தாரிடமிருந்து மீட்டு, தன்னுடன் சேர்த்து வைக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த வள்ளியூர் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: 35 வயது ஆண்களே உஷார்... திருமண கமிஷன் மோசடி... வாய்ஸ் மெசேஜால் வெளிவந்த உண்மை...