நெல்லை மாவட்டத்திலும் கரோனா பாதிப்பு கடந்த சில மாதங்களாக குறைந்த நிலையில் உள்ளது. நெல்லை மாவட்டத்தைப் பொறுத்தவரை கடந்த 2020 ஏப்ரல் மாதம் தொடக்கத்திலிருந்து கரோனா தாக்கம் ஏற்பட்டது.
குறிப்பாக சென்னை, மும்பை உள்ளிட்ட வெளி மாவட்டங்கள், வெளிமாநிலங்களிலிருந்து ஏராளமானோர் சொந்த ஊர் திரும்பியதால் தொற்று எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்து, நாள்தோறும் சராசரியாக 200 முதல் அதிகபட்சம் 350 பேர் வரை தொற்றால் பாதிக்கப்பட்டுவந்தனர்.
நெல்லையில் பாளையங்கோட்டை அரசு தலைமை மருத்துவமனை, சித்த மருத்துவமனை, நெல்லை அரசு பொறியியல் கல்லூரி உள்ளிட்ட இடங்களில் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டுவந்தது. இந்தச் சூழ்நிலையில் கடந்த சில நாள்களாக கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நெல்லையில் குறைந்தது.
குறிப்பாக ஒற்றை இலக்கங்களில் பாதிப்பு எண்ணிக்கை குறைந்தது. மாநகர் அல்லது மாவட்டங்களின் சில பகுதிகளில் ஒருவர் அல்லது இரண்டு, மூன்று நபர்களுக்கு மட்டுமே தொற்று பாதிப்பு ஏற்பட்டது. இந்தச் சூழ்நிலையில் நெல்லை மாவட்டத்தில் இன்று (பிப். 01) முதல்முறையாகத் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை பூஜ்ஜியத்திற்குச் சென்றது.
அதன்படி இன்று நெல்லை மாவட்டம் முழுவதும் ஒருவருக்குக்கூட கரோனா தொற்று பாதிக்கப்படவில்லை என்று மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு நெல்லை மக்களிடையே ஒருவித நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது இருப்பினும் தொடர்ந்து பட்டியலில் பூஜ்யம் இடம்பெற மக்கள், அரசு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் எதிர்பார்த்துள்ளனர்.
இதையும் படிங்க: பட்ஜெட் 2021: தமிழ்நாட்டில் உள்கட்டமைப்புத் திட்டங்களுக்கு ரூ.1.03 லட்சம் கோடி அறிவிப்பு!