விழுப்புரத்தில் உள்ள ஜெயலலிதா பல்கலைக்கழகத்தை, சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்துடன் இணைக்கும் மசோதாவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, சட்டப்பேரவையில் அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் இன்று (ஆக. 31) வெளிநடப்பு செய்தனர்.
இதன் பின்னர் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் அக்கட்சியின் சட்டப்பேரவை உறுப்பினர்கள் சென்னையில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதையடுத்து சாலை மறியலில் ஈடுபட்ட அதிமுகவினரை காவல் துறையினர் கைது செய்தனர்.
சென்னையில் தொட்டதால் நெல்லையில் வெடித்தது:
சென்னையில் அதிமுகவினர் கைது செய்யப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து, திருநெல்வேலி வண்ணாரப்பேட்டை செல்லபாண்டியன் மேம்பாலம் அருகில் அதிமுக மாவட்டச் செயலாளர் தச்சை கணேசராஜா தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட கட்சியினர் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்
அப்போது அவர்கள் சாலையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால், அங்கு கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
திமுக அரசு அதிமுகவினர் மீது பொய் வழக்குப் போடுவதாக மறியலில் ஈடுபட்ட அதிமுகவினர் தெரிவித்தனர். மேலும், மக்கள் விரோத 'ஸ்டாலின் ஒழிக' என்று கோஷம் எழுப்பியதால் அங்கு பரபரப்பான சூழல் நிலவியது.
இதைத்தொடர்ந்து பாதுகாப்புக்கு நின்ற காவல்துறையினர் மறியலில் ஈடுபட்ட அதிமுகவினரை கைது செய்து வேனில் அழைத்துச் சென்றனர். இந்தச் சம்பவத்தால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
இதையும் படிங்க: ஐந்து நாள்களாக குடிநீர் வராததைக் கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல்!