திருநெல்வேலி மாவட்டத்தில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பல்வேறு திட்டப் பணிகள் நடைபெற்றுவருகின்றன. அதன்படி, ரூ.1000 கோடி மதிப்பீட்டில் புதிய பேருந்து நிலையம், நேதாஜி போஸ் மார்க்கெட் புதுப்பித்தல், பழைய பேருந்து நிலையத்தை நவீனமயமாக்குதல் உள்ளிட்ட பணிகள் நடைபெறுகின்றன. அதில், புதிய பேருந்து நிலையத்தில் மேற்கொள்ளப்படும் பணிக்காக அங்குள்ள வேப்பம், பூவரசு மரங்களை அகற்ற வேண்டிய சூழல் ஏற்பட்டது.
ஆனால் அவை 20 ஆண்டுகளுக்கும் மேல் பழமையான மரங்கள் என்பதாலும, மரங்களை வெட்ட எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதாலும் மாநகராட்சி அலுவலர்கள் அவற்றை வேருடன் பிடுங்கி மாற்று இடத்தில் நட முடிவு செய்தனர். அதன் அடிப்படையில் இன்று(அக்.25) மரங்களை பிடுங்கி மாற்று இடத்தில் நடும் பணி தொடங்கியுள்ளது.
முதல் கட்டமாக 10 ஆண்டுகள் பழமை வாய்ந்த வேப்ப மரம் ஒன்று ஜேசிபி வாகனம் மூலம் வேரோடு பிடுங்கி எடுக்கப்பட்டு, 200 மீட்டர் தொலைவில் உள்ள குளத்துக் கரையில் நடப்பட்டது. இதேபோல மொத்தம் உள்ள 120 மரங்கள் வேருடன் பிடுங்கப்பட்டு மாற்று இடத்தில் நடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: கருவேல மரங்களை அகற்றக் கோரிய வழக்கு: பொதுப்பணித் துறைச் செயலர் பதிலளிக்க உத்தரவு