டெல்லியில் வேளாண் சட்டத்தைத் திரும்பப் பெற வலியுறுத்தி விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்திவருகின்றனர். இந்தப் போராட்டத்திற்குப் பல்வேறு அமைப்புகளும் கட்சிகளும் ஆதரவு தெரிவித்துவருகின்றன.
இதனால் நாடு முழுவதும் இது பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இதன் ஒரு பகுதியாக சேலம் மாவட்டம் சூரமங்கலத்தில் இளைஞர் சங்கம் சார்பாக தலைமை அஞ்சலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்திருந்தனர்.
இன்று காலை11.15 மணிக்கு ஊர்வலமாக வந்த சங்கத்தினர் அஞ்சலகத்தை முற்றுகையிட்டனர். அவர்களை காவல் துறையினர் தடுத்து நிறுத்த முற்பட்டபோது மத்திய அரசுக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பி சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.
பின்னர் அசம்பாவிதங்களைத் தவிர்க்கும் வண்ணம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அனைவரையும் காவல் துறையினர் கைதுசெய்தனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.