சேலம்: மயானம் செல்ல உரிய பாதை கேட்டு பல்வேறு முறை மாவட்ட நிர்வாகம் மற்றும் எம்.எல்.ஏ. உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகளிடம் கோரிக்கை வைத்தும் பலனில்லை என்பதால் ஏற்காடு மலைவாழ் மக்கள் சட்டப்பேரவை தேர்தலை புறக்கணித்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.
நாகலூர் எஸ்.டி. காலனி
சேலம் மாவட்டம் சேர்வராயன் மலைத்தொடரில் அமைந்துள்ள ஏற்காடு அடுத்த நாகலூர் எஸ்.டி. காலனி பகுதியில் சுமார் 300க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்தப் பகுதியில் சுமார் 50 ஆண்டுகளுக்கும் மேலாக ஊர் மக்கள் அரசு புறம்போக்கு இடத்தில் மயானம் அமைத்து இறந்துபோன தங்களின் உறவினர்களுக்கு இறுதிச் சடங்குகள் செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் எஸ்.டி.காலனி மக்களை கடந்த சில வருடங்களாக , பல ஆண்டுகளாகப் பயன்படுத்தி வரும் மயானத்திற்கு செல்லும் வழி தனக்கு சொந்தமானது என்று கூறி, தனியார் காஃபி எஸ்டேட் நிர்வாகம் தடை விதித்துள்ளது. இது தொடர்பாக சேலம் மாவட்ட ஆட்சியர் மற்றும் ஏற்காடு தொகுதி எம்.எல்.ஏ. சித்ரா உள்ளிட்டோரிடம் கோரிக்கை மனுக்கள் அளித்துள்ளனர்.
தேர்தல் புறக்கணிப்பு- கறுப்புக் கொடி
ஆனால் அந்த மனுக்கள் மீது எந்த நடவடிக்கையும் இதுவரை அரசுத் தரப்பில் எடுக்கவில்லை என்பதால், ஆவேசம் அடைந்த மக்கள் கடந்த மூன்று நாள்களாக கறுப்புக்கொடி போராட்டம் நடத்தி வருகின்றனர். ஊரின் நுழைவாயிலில் தொடங்கி அனைவரின் வீடுகளிலும் கறுப்புக்கொடி கட்டி அரசுக்கு தங்களது எதிர்ப்பை தெரிவித்துள்ள மக்கள், கோரிக்கை நிறைவேற்றப்படாவிட்டால் தொடர் தேர்தல் புறக்கணிப்புப் போராட்டம் நடத்தவுள்ளதாக எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
போராட்டம் தொடர்பாக பேட்டியளித்த நாகலூர் எஸ்.டி.காலனி ஊர் தலைவர் கிருஷ்ணகுமார் கூறுகையில், "காலங்காலமாக நாங்கள் பயன்படுத்தி வந்த வழித்தடத்தை இப்போது சேலத்தை சேர்ந்த எஸ்டேட் முதலாளி இப்போது பயன்படுத்த கூடாது. அது எங்களுக்கு சொந்தமானது என்று கூறுகிறார். அவர்மீது நடவடிக்கை எடுத்து எங்கள் வழித்தடத்தை பயன்படுத்தி, மயானம் செல்ல அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும்.
எச்சரிக்கை
இல்லையென்றால் எங்களது ஆதார் கார்டு, ரேஷன் கார்டு ஆகியவற்றை அரசுக்கு திருப்பி அளித்துவிடுவோம். அதன் முதல் கட்டமாக வரும் சட்டப்பேரவை தேர்தலை புறக்கணிக்கிறோம். எங்கள் ஊரில் யாரும் வாக்களிக்க மாட்டோம்" என்று தெரிவித்தார்.
அப்பகுதிவாசி கல்பனா கூறுகையில், " பாதை கிடைக்காவிட்டால், எங்கள் ஊரில் யார் இறந்தாலும் உடலை அரசு அலுவலகம் முன்பு கொண்டு போட்டுவிட்டு அங்கேயே போராட்டம் நடத்துவோம். " என்றார். ஊர் மக்களின் தேர்தல் புறக்கணிப்புப் போராட்டம் சேலம் ஏற்காடு தொகுதியில் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: வீடுகளில் கருப்புக்கொடி ஏற்றி தேர்தல் புறக்கணிப்பு போராட்டம்!