சேலம்: கர்நாடக மாநில காவிரி நீர்பிடிப்புப் பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக மேட்டூர் அணை, 42ஆவது முறையாக தற்போது நிரம்பியுள்ளது. இதனால் அணையில் இருந்து வெளியேற்றப்படும் நீர் காவிரி ஆற்றில் பொங்கி ஓடுகிறது.
மேட்டூர் அணைக்கு நேற்று (ஜூலை 18) காலை 1 லட்சத்து 24 ஆயிரத்து 113 கன அடியாக இருந்த நீர்வரத்து, இன்று மேலும் அதிகரித்து, விநாடிக்கு 1 லட்சத்து 29 ஆயிரத்து 403 கன அடியாக உயர்ந்துள்ளது. அணையில் இருந்து 16 கண் மதகுகள் வழியாக காவிரியில் 83 ஆயிரம் கன அடியும், மதகுகள் வழியாக காவிரியில் 23 ஆயிரம் கன அடியும், கிழக்கு மற்றும் மேற்கு கால்வாயில் 500 கன அடியும் என மொத்தம் 1 லட்சத்து 6 ஆயிரம் கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.
இதனால், காவிரியில் தொடர்ந்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. காவிரி கரைக்கு யாரும் செல்ல வேண்டாம் என்று பொதுப்பணித்துறையினர் அறிவுறுத்தி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக, காவிரி கரையோர கிராமங்களில் தண்டோரா மூலம் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேட்டூர் அணை நீர்மட்டம் இன்று காலை எட்டு மணி நிலவரப்படி 120 .27 அடியாக இருந்தது. அணை முழுவதும் நிரம்பி உள்ளதால் கடல் போல காட்சியளிக்கிறது. இதனை ஏராளமான மக்கள் ஆர்வமுடன் கண்டுகளித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: ஒகேனக்கலில் நீர்வரத்து ஒரு லட்சத்து 20ஆயிரம் கனஅடியாக அதிகரிப்பு!