சேலம்: திமுக முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தின் மகன் வீரபாண்டி ராஜேந்திரன் எனும் ராஜா மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார்.
இவர் முன்னாள் திமுக சட்டப்பேரவை உறுப்பினராக இருந்துள்ளார். தனது பிறந்தநாளை முன்னிட்டு, இன்று காலை தந்தை வீரபாண்டி ஆறுமுகத்தின் படத்திற்கு மாலை அணிவிக்கும் தருவாயில், மாரடைப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்தார்.
உடனடியாக அருகிலிருந்தவர்கள் அவரை மீட்டு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
வீரபாண்டி ராஜேந்திரன்
திமுகவின் மூத்த முன்னோடியான வீரபாண்டி ஆறுமுகத்தின் இரண்டாவது மகன் தான் வீரபாண்டி ராஜா. வீரபாண்டி ஆறுமுகம் உயிருடன் இருந்தவரை சேலம் மாவட்டத்தில் திமுகவை பலம்வாய்ந்ததாக வைத்திருந்தார். அவரை எதிர்த்து அரசியல் செய்ய முடியாமல் முன்னாள் முதலமைச்சராக இருந்த எடப்பாடி பழனிசாமியே பல நேரங்களில் தடுமாறியதுண்டு.
காரணம் அந்தளவிற்கு கட்சிக்காக தடாலடி காரியங்களில் இறங்கக் கூடியவர் வீரபாண்டி ஆறுமுகம். இவரை சேலத்து சிங்கம் என்றும், வீரபாண்டியார் என்றும் தான் அடைமொழிகளில் திமுக நிர்வாகிகள் அழைத்தார்கள். துணிச்சல் மிக்கவர் ஆறுமுகம் என கருணாநிதியிடம் பெயரெடுத்தவர் அவர்.
வீரபாண்டி ஆறுமுகத்தின் அரசியல் வாரிசாக செயல்பட்டவர் அவரது மூத்த மகன் செழியன். ஆனால் அவர் உடல்நலக்குறைவால் திடீரென காலமானதையடுத்து அவரது இடத்திற்கு வந்தார் இரண்டாவது மகன் வீரபாண்டி ராஜா. திமுக சார்பில் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட்டு உறுப்பினராக ஒருமுறை தேர்வாகியுள்ளார்.
இதனிடையே வீரபாண்டி ஆறுமுகம் உடல்நலக்குறைவால் மரணம் அடைந்ததை அடுத்து, திமுக தலைவர் ஸ்டாலின் சேலம் மாவட்டத்தை கட்சி ரீதியாக மூன்றாக பிரித்து வீரபாண்டி ராஜாவுக்கு மாவட்ட பொறுப்பாளர் பதவி வழங்கினார்.
- இதையும் படிங்க: சுதந்திர வரலாற்றை சுமந்து நிற்கும் சேவாகிராம்