சென்னை திருவல்லிக்கேணி பகுதியில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார், 'விமர்சனங்கள் ஆரோக்கியமான முறையிலிருந்தால் வரவேற்கலாம். இந்தத் தேர்தலில் தனி நபர் விமர்சனம் என்பது அதிகளவில் வந்து கொண்டிருக்கிறது. அதுமட்டுமின்றி திமுகதான் தனி நபர் விமர்சனத்தை மேற்கொண்டுவருகின்றனர். அதனால்தான் அதிமுக பதில் கூற வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது. எனவே வீணாக ஸ்டாலின் நெருப்பில் கையை வைத்துச் சுட்டுக்கொள்ள வேண்டாம் என்று எச்சரிக்கிறேன்.
காங்., கட்சி நதி நீர் இணைப்பைக் கிடப்பில் போட்டுவிட்டது. அதனால்தான் இந்த திட்டம் செயல்படுத்தத் தாமதம் ஏற்பட்டுள்ளது என்ற அவர், இதுகுறித்து ஸ்டாலின் மற்றும் காங்., கட்சியினருக்குத் தெரியுமா? நான்கு சட்டப்பேரவை இடைத்தேர்தல் குறித்த கேள்விக்கு, எங்களைப் பொறுத்தவரை 2021இல் வரும் பொதுத்தேர்தலில் அனைத்து தொகுதிகளையும் கைப்பற்றுவோம்.
அதிமுக கூட்டணி வேறு; கொள்கை வேறு. திமுக கூட்டணி என்பது மொத்தமும் முரண்பாடான கூட்டணி. மாநிலத்தின் உரிமையைப் பாதுகாக்கும் வகையில் எங்கள் குரலை நாங்கள் எழுப்புவோம். அதிமுக அரசைப் பொறுத்தவரை எதிர்க்க வேண்டியதை எதிர்ப்போம். ஆதரிக்க வேண்டியவற்றை ஆதரிப்போம். மேலும் எட்டு வழிச்சாலையில் விவசாயிகள் நலன் பாதுகாக்கும் வகையில்தான் அரசின் நடவடிக்கை இருக்கும்' என்றார்
ப.சிதம்பரம் அதிமுகவை விமர்சனம் செய்துள்ளது குறித்த கேள்விக்கு, காங்., கூட்டணி என்பது கண்ணாடி மீது கல் எறிந்தால் என்ன ஆகுமோ, அதேபோல்தான் அந்தக் கூட்டணி நொறுங்கி விடும் என்று கூறினார்.