சேலம் : சேலத்தில் நாம் தமிழர் கட்சி சார்பில் விவசாயிகளுடன் கலந்தாய்வு கூட்டம் செவ்வாய்கிழமை நடைபெற்றது. இந்த கூட்டத்தில், சேலம், கிருஷ்ணகிரி, தருமபுரி, நாமக்கல், கரூர் ஆகிய மாவட்டங்களில் 2021 சட்டப்பேரவைத் தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை சீமான் அறிமுகம் செய்து வைத்தார்.
முன்னதாக, சீமான் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், "மக்களை பாதுகாப்பதற்கு தானே அரசு. பாதிப்பை ஏற்படுத்தும் என்று தெரிந்தே வேளாண் சட்டங்களை மத்திய அரசு நிறைவேற்றி இருக்கிறது. போராடுகிற மக்களை குறை சொல்வது வேடிக்கையாக இருக்கிறது. கண்ணியமாக போராடி சட்டத்தைத் திரும்ப பெற சொன்ன போதே அதைத் திரும்ப பெற்றிருக்க வேண்டியது தானே. அதனால் போராடுவதைத் தவிர வேறு வழியில்லை.
விவசாயிகளில் தீவிரவாதிகள் இல்லை, அவர்களுடன் நெருங்கிப் பழகி இருக்கிறேன். காவல்துறையும், அரசும்தான் போராடுபவர்களை மாவோயிஸ்ட், தீவிரவாதிகள், சமூக விரோதிகள் என கூறுகிறது.
கூட்டணி என்பது வாய்ப்பில்லை. நாங்கள் வேட்பாளர்களை அறிவித்து வருகிறோம். எங்கள் மூதாதையினரை போற்றுவதற்காக வேலை கையில் எடுத்தேன். தற்போது அதை வாக்கு அரசியலுக்காக பலர் கையில் எடுத்திருக்கின்றனர். நாம் தமிழர் கட்சி சமத்துவத்தைக் கொண்டு வர பாடுபடுகிறது. பசி, பட்டினி இல்லாத சாதிய இழிவு இல்லாத தமிழ்நாட்டை உருவாக்குவதையே கொள்கையாகக் கொண்டு இத்தேர்தலை சந்திக்கிறோம்.
யார் ஆட்சிக்கு வரக்கூடாது என்பதை விட, நாம் தமிழர் கட்சி ஆட்சிக்கு வர வேண்டும் என்பதையே இலக்காக வைத்துள்ளோம். தேர்தலில் திராவிடத்திற்கும், தமிழ் தேசியத்திற்கும் தான் போட்டி. திராவிடத்தின் ஆணி வேர் திமுக. அதனால் அவர்களுடன் தான் மோதுகிறோம்.
தமிழ்நாட்டில் பல ஆண்டுகளாக ஆட்சியில் இருந்து தீர்க்காத குறைகளை வெறும் 100 நாட்களில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தீர்த்து விடுவாரா? என்று தெரிவித்தவர்,
பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலையில் ஆளுநர் நல்ல முடிவெடுப்பார் என நம்புகிறோம். இல்லையெனில் நாங்கள் ஆட்சி பொறுப்பேற்றவுடன் சிறையை திறந்து விடுவிப்போம். ராகுல் நடிக்க ஆசைப்பட்டு தான் தொடர் பரப்புரை செய்து வருகிறார் என்றார்.
இதையும் படிங்க: பாமகவின் தேர்தல் கூட்டணி கணக்கு என்ன?