சேலம்: கொங்கணாபுரம் பேரூராட்சியில் முன்களப்பணியாளர்களுக்கு அதிமுக சார்பில் நலத்திட்ட உதவிகளை அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும், தமிழ்நாடு எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே.பழனிசாமி இன்று(ஆகஸ்ட்.9) நேரில் வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “திமுக அரசு சார்பில், வெள்ளை அறிக்கை வெளியிடுவதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றும் இல்லை. ஒவ்வொரு ஆண்டும் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. அதில் வரவு செலவு வெளியிடப்படுகிறது. 2011-ல் ஒரு லட்சத்து 14 ஆயிரம் கோடி கடனை திமுக அரசு விட்டுச் சென்றார்கள். படிப்படியாக கடன் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. வளர்ச்சித் திட்டங்களுக்கு கடன் வாங்க வேண்டியுள்ளது. பாதிக்கும் மேல் மூலதனமாக உள்ளது. பல்வேறு மாநிலங்களும் வளர்ச்சிக்காக கடன் வாங்க வேண்டியுள்ளது.
புதிதாக ஒன்றும் செய்யவில்லை
மின்கட்டணம் பல வருடங்களாக உயர்த்தவில்லை. மின்சாதனங்கள், நிலக்கரி பல மடங்கு விலை உயர்ந்துள்ளது. இதனால் அந்த நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இது திமுக ஆட்சியிலும் நடந்துள்ளது. இதேபோன்று டீசல் விலை உயர்ந்த போதிலும் போக்குவரத்துக் கட்டணம் உயர்த்தவில்லை. அதனால் அந்தத்துறையில் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. எந்த அரசு வந்தாலும் இதனை தவிர்க்க முடியாது.
ஏற்கனவே அதிமுக அரசில் போட்ட திட்டங்களுக்குத்தான் அடிக்கல் நாட்டி வருகிறார்கள். 100 நாள் திமுக ஆட்சியில் எந்த திட்டமும் நிறைவேற்றியதாக எனக்குத் தெரியவில்லை. அதிமுக ஆட்சியில் முதலமைச்சர் குறை தீர்க்கும் முகாமில் 9 லட்சம் மனுக்கள் பெறப்பட்டு, 5 லட்சம் மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டது. அதே திட்டத்தைத்தான் திமுக அரசும் செயல்படுத்தி வருகிறது.
தேர்தல் நேரத்தில் மக்கள் அளிக்கும் கோரிக்கை மனுக்களுக்கு 100 நாளில் தீர்வு காணப்படும், திமுக ஆட்சி அமைந்ததும் உடனடியாக நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என பல முறை பிரசாரக் கூட்டங்களில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியிருந்தார். அதனைத்தான் நாங்கள் கேட்கிறோம். மக்களை ஏமாற்றி ஆட்சியில் அமர்ந்தவுடன் வாக்குறுதிகள் காற்றில் பறந்து விட்டன.
நீட் தேர்வு ரத்தும், ராஜேந்திர பாலாஜி சர்ச்சையும்
நீட் தேர்வு ரத்து தொடர்பாக அமைக்கப்பட்ட ஆணையத்தின் அறிக்கை கிடைத்த பிறகும் இதுவரை நடவடிக்கை இல்லை. 505 அறிவிப்புகளை தேர்தலின் போது தெரிவித்த திமுக ஆட்சிக்கு வந்து 100 நாட்களாகியும் நிறைவேற்றவில்லை. இதனைக் கண்டித்துத்தான் தமிழ்நாடு முழுவதும் 13 ஆயிரம் இடங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. மக்கள் கொந்தளிப்பாக இருப்பதுதான் இதற்கு காரணம். உள்ளாட்சித் தேர்தல் குறித்து முறையாக மாநில அரசு அறிவித்தவுடன் எங்கள் நிலைப்பாட்டை தெரிவிப்போம்.
முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி அதிமுகவில்தான் இருக்கிறார். சில ஊடகங்கள் தவறான தகவலை வெளியிட்டுள்ளனர். ஆளும் கட்சி பல்வேறு தவறுகளை செய்தாலும் ஊடகங்கள் அதனை வெளியிடுவதில்லை. இது வருந்தத்தக்கது. நாங்கள் ஆளும் கட்சியாக இருந்தபோது, நாள்தோறும் ஊடகங்கள் ஏதாவது ஒரு பிரச்னையை வெளியிட்டுக் கொண்டே இருந்து விட்டு, தற்போது அந்த நிலையை மறந்துவிட்டனர்.
பட்டப்பகலில் கொலை
சேலம் மாவட்டத்தில் பட்டப்பகலில் ஒரு காவல்துறை அலுவலர் ஒருவரை அடித்துக் கொன்ற சம்பவம் குறித்து ஊடகங்கள் பெரிய அளவில் செய்தி வெளியிடவில்லை. அதிமுக ஆட்சியில் தூத்துக்குடி சம்பவத்தை பெரிய அளவில் வெளியிட்ட ஊடகங்கள் தற்போது ஆளும் திமுகவிற்கு முழு ஆதரவாக மாறிவிட்டன. உண்மை சம்பவத்தை நாட்டு மக்களுக்கு முழுமையாக தெரிவிக்க வேண்டும்.
அதிமுக புதிய அவைத்தலைவர் குறித்து கட்சித் தலைமை முடிவு செய்யும். மேட்டூர் அணை உபரிநீரைக் கொண்டு 100 ஏரிகளை நிரப்பும் திட்டத்தை விரைந்து செயல்படுத்த மாவட்ட ஆட்சியருக்கு வலியுறுத்தி உள்ளோம். மேட்டூர் அணை நிரம்பி உபரிநீர் ஏரிகளுக்கு கிடைக்கும் என எதிர்பார்க்கிறோம். திமுக அரசு இதனை நடைமுறைபடுத்தும் என நம்புகிறோம்" என தெரிவித்தார்.
இதையும் படிங்க: ஸ்டாலினுக்கு எதிரான வழக்கு தள்ளுபடி: மனுதாரருக்கு 5 ஆண்டுகள் தடை