சேலம்: ஒருவர் தமக்குத் தானே சிலை வடிவமைத்து நிறுவியுள்ள சம்பவம் சேலம் சுற்றுவட்டாரப் பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டம், வாழப்பாடி அருகேயுள்ள அத்தனூர்பட்டி தூக்கியம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் நல்லதம்பி (60). இவர் மனைவி, குழந்தைகளுடன் தனது சொந்த வீட்டில் வசித்து வந்த போது, திடீரென ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவர்களைப் பிரிந்து தனியாக சென்றுவிட்டார். தற்போது அதே பகுதியில் 25 ஆண்டுகளாக தெருக்களில் உள்ள நெகிழிக் குப்பைகள், கீழே கிடக்கும் மதுபாட்டில்களை சேகரித்து அவற்றை விற்று கிடைத்த பணத்தைக் கொண்டு, தனக்கு என்று ஒரு ஓட்டு வீட்டைக் கட்டிக் கொண்டு, அதிலேயே வசித்து வருகிறார், நல்லதம்பி.
நல்ல தம்பிக்கு, சிறு வயது முதலே தன்னுடைய மரணத்திற்குப் பின்பு, தான் வாழ்ந்த இந்த பகுதியில் உள்ளவர்கள், தன்னை குறித்து பேசவேண்டும் என்றும்; தன்னை மறந்துவிடக் கூடாது என்பதிலும் விருப்பம் இருந்துள்ளது.
அதற்கு என்ன செய்யலாம் என்று தனக்கு நன்கு தெரிந்த நண்பர்களிடம் ஆலோசித்த நல்லதம்பி, அவர்களின் ஆலோசனையின்படி தனக்குத் தானே சிலை வடிவமைத்து, அதனை தனக்கு சொந்தமான இடத்தில் வைத்து விடலாம் என்று முடிவு எடுத்தார்.
தான் இத்தனை ஆண்டுகளாக உழைத்து சேகரித்த ஒரு லட்சத்து 30ஆயிரம் ரூபாய் பணத்தினைக் கொண்டு, கும்பகோணம் சிற்பி ஒருவரின் கை வண்ணத்தில் தன்னுடைய சிலையை தனது கிராமத்தில் நல்ல தம்பி நிறுவியுள்ளார்.
நல்ல தம்பி உருவத்தை அச்சு அசலாக அப்படியே பிரதிபலிக்கும் அந்த சிலை, கிராம மக்களிடையே பெரும் பேசுபொருளாகியுள்ளது. அவ்வழியாக செல்பவர்கள் அனைவரும் அந்த சிலையை நின்று பார்த்து விட்டுச் செல்கின்றனர்.