சேலம் மத்திய சிறையில் 2016ஆம் ஆண்டு சிறைக் கண்காணிப்பாளராக பணியாற்றிய செந்தில்குமார் என்பவர் அப்போது சிறையில் அடைக்கப்பட்ட சமூக ஆர்வலர் பியூஸ் மானுஷை தாக்கியதாகப் புகார் எழுந்தது. அதனால் அவர் பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.
இதுதொடர்பான வழக்கு சேலம் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் நடைபெற்றுவருகிறது. இதற்கிடையில் பியூஸ் மானுஷ் தாக்கப்பட்ட சம்பவம் குறித்து ஜெயிலர் மருதமுத்து பேசிய வாட்ஸ்அப் ஆடியோ வெளியாகி சர்ச்சையைக் கிளப்பியது.
அதன்காரணமாக ஜெயிலர் மருதமுத்து கைதிகளுக்கு ஆதரவாகப் பேசுவதாகக் கூறி இடைநீக்கம் செய்யப்பட்டார். அதைத் தொடந்து அவர் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார். இந்த நிலையில் செந்தில்குமார் மீண்டும் சேலம் மத்திய சிறைக்கு பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சமூக ஆர்வலர் பியூஸ் மானுஷ், சிறை முன்பு போராட்டம் நடத்தினார். அப்போது அவர், சிறையில் இருந்து வெளியே வந்து 5 ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டது. என்னை அடித்து துன்புறுத்தினாலும் உயிருடன் வெளியே விட்டதற்கு சிறை கண்காணிப்பாளர் செந்தில்குமாருக்கு நன்றி.
எனது வழக்கில் முக்கிய சாட்சியான ஜெயிலர் மருதமுத்துவின் உயிரிழப்பு சந்தேகத்திற்கு இடமாக உள்ளது. அதற்கு நீதி வேண்டும் என்று தெரிவித்தார். அதையடுத்து அவரிடம் காவலர்கள் பேச்சு வார்த்தை நடத்தி அனுப்பி வைத்தனர்.