தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளில் வசிக்கும் வட மாநிலத் தொழிலாளர்களை சொந்த ஊருக்கு அனுப்பி வைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. பலர் சிறப்பு ரயில்களில் தங்கள் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
அதன் ஒரு பகுதியாக சேலம் மாவட்டத்திலுள்ள பிகார், உத்தரப்பிரதேசம், மகாராஷ்டிரா, ஒடிசா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள், தங்களைச் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கக் கோரி, சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தரையில் அமர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட வடமாநிலத் தொழிலாளர்களை காவல் துறையினர் கைது செய்ய முற்பட்டபோது அனைவரும் சிதறி ஓடினர். ஆனாலும் காவல் துறையினர் அவர்களை விடாமல் விரட்டி, கைது செய்து, வேனில் ஏற்றி அழைத்துச் சென்றனர்.
அப்போது வடமாநில இளைஞர்கள் செய்தியாளர்களிடம் கூறுகையில், 'நாடு முழுவதும் கடும் அச்சம் ஏற்பட்டுள்ளது. சேலத்தில் ரெட்டியூர், குரங்குசாவடி உள்ளிட்டப் பகுதிகளில் ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக நாங்கள் தங்கி, கட்டட வேலை, பட்டறை வேலை போன்றவற்றை செய்து வருகிறோம். தற்போது சேலத்தில் இருந்து நிறைய வடமாநிலத் தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றனர். அதேபோல உத்தரப் பிரதேசம், மகாராஷ்டிரா, ஒடிசா, பிகார் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த எங்களையும் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்க மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதை நாங்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். ஆனால், எங்களை காவல் துறையினர் மிரட்டுகின்றனர்' என்று தெரிவித்தனர்.
வட மாநிலத்தவர்களின் இந்தப் போராட்டத்தால் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலக சாலை பெரும் பரபரப்புடன் காணப்பட்டது. வடமாநில இளைஞர்களின் இந்தத் திடீர் போராட்டம் குறித்து சேலம் டவுன் காவல் நிலைய ஆய்வாளர் குமார் விசாரணை நடத்தி வருகிறார்.
இதையும் படிங்க... பல்லாவரம் அருகே 1000க்கும் மேற்பட்ட வடமாநில தொழிலாளர்கள் போராட்டம்