தமிழ்நாட்டின் மிகப்பெரிய மாவட்டங்களில் ஒருங்கிணைந்த சேலம் மாவட்டமும் ஒன்றாக இருந்தது. இது அரசின் நிர்வாக விவகாரங்களுக்கு பெரும் சவாலாகவே இருந்தது எனலாம். இதனையடுத்து சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல் என்று தனித் தனி மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டது. தற்போது சேலம் மாவட்டம், 640 வருவாய் கிராமங்கள், 10 வட்டங்கள், 4 வருவாய் கோட்டங்கள் என்று, 5,205 சதுர கி.மீ பரப்பில், பரந்து விரிந்து உள்ளது.
சுமார் 35 லட்சம் மக்கள் தொகை கொண்ட மாவட்டமாகவும் சேலம் மாவட்டம் உள்ளது குறிப்பிடத்தக்கது. சேலம் மாவட்டத்தின் கடைக்கோடி கிராமங்களான வீரகனூர், செந்தாரப்பட்டி, தலைவாசல், கொளத்தூர், கோவிந்தபாடி ஆகிய மாவட்டத்தின், கிழக்கு மற்றும் மேற்கு பகுதிகளிலிருந்து மக்கள், சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வர வேண்டும் என்றால் குறைந்த பட்சம் மூன்று மணி நேரம் பயணித்தால் மட்டுமே சாத்தியமாகும்.
இதனால் அரசு உதவிகள், சான்றிதழ்கள் வாங்கிட அல்லது தங்கள் பகுதிகளில் உள்ள அடிப்படைத் தேவைகள் குறித்த புகார் மனுக்களை அளிக்க வேண்டும் என்றால், ஒரு நாளையே சேலம் மாவட்டத்தின் கிழக்குப் பகுதி மக்கள் செலவழிக்க வேண்டியுள்ளது. இதே நிலை தான் மாவட்ட நிர்வாக அலுவலகர்களுக்கும். விவசாயத்தையே முழு நேரத் தொழிலாகச் செய்யும் சேலம் மாவட்டத்தின் கிழக்குப் பகுதி மக்கள் மாவட்ட நிர்வாகத்தோடு நெருங்கிய தொடர்பில் இருக்கிறார்களா என்றால் அது கேள்விக்குறிதான்.
நேற்று எடப்பாடி நீதிமன்ற திறப்பு விழாவில் எடப்பாடியைத் தலைநகரமாகக் கொண்டு தனி மாவட்டம் உருவாக்க வேண்டும் என்று வழக்கறிஞர்கள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் வலியுறுத்தினர். இந்த செய்தியை அறிந்த ஆத்தூர் பகுதி வாழ் பொதுமக்கள் மற்றும் அரசியல் இயக்கத்தினர், ஆத்தூரைத் தலைமையிடமாகக் கொண்ட புதிய மாவட்டத்தைத் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உடனே அறிவிக்க வேண்டும் என்று கோரிக்கையை வலுவாக எழுப்பத் தொடங்கியுள்ளனர்.
இந்த விவகாரம் தொடர்பாக ‘ஈடிவி பாரத் தமிழ்’ செய்திகளுக்கு, ஆத்தூர் முன்னாள் நகர்மன்ற உறுப்பினர் ஸ்டாலின் பேசுகையில், "ஆத்தூரும் எடப்பாடியும் ஒரே நேரத்தில் நகராட்சியாக அறிவிக்கப்பட்டது. அதன் பின்னர், ஒரே ஆண்டில் தான் பொன் விழாவும் கொண்டாடப்பட்டது. இந்த நிலையில்தான் எடப்பாடியைத் தனி தலைநகரமாகக் கொண்ட புதிய மாவட்டம் சேலம் மாவட்டத்திலிருந்து உருவாக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை, சிலர் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக எழுதியுள்ளதாகத் தெரிகிறது.
அதற்கு முன்பாக அனைத்து தகுதிகளும் கொண்ட ஆத்தூர் நகராட்சியைத் தலைமையிடமாகக் கொண்டு தனி மாவட்டம் உருவாக்கப்பட வேண்டும் என்பதே பொது மக்களின் விருப்பமாக இருக்கிறது. சேலம் மாவட்டத்திலிருந்து பிரித்து புதிய மாவட்டத்தை ஆத்தூரைத் தலைமை இடமாகக் கொண்டு உருவாக்கிட முன் வர வேண்டும்” என்று தெரிவித்தார்.