சேலம் மாநகராட்சியில் 21ஆவது கோட்டத்திற்கு உட்பட்ட அரியகவுண்டாம்பட்டி பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இதில் அரசு புறம்போக்குநிலத்தில் கடந்த 40 ஆண்டுகளாக சுமார் 40 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
குடிநீர், மின்சாரம் போன்ற எவ்வித அடிப்படை வசதிகளும் இல்லாத நிலையிலும்கூட பல குடும்பங்கள் இங்கு வசித்து வருகின்றன. இந்த நிலையில் அரசு புறம்போக்குநிலத்தில் உள்ள குடியிருப்புகளை அப்புறப்படுத்திவிட்டு அங்கு குப்பை அரைக்கும் தொழிற்சாலை அமைக்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.
ஏற்கெனவே குடியிருப்புப் பகுதிக்கு அருகில் உள்ள குப்பைக் கிடங்கினால் கொசு, வண்டு மற்றும் ஈக்களின் தொல்லை அதிகளவில் இருப்பதால் பல்வேறு உடல் உபாதைகளை சந்தித்து வருவதாகவும், மேற்கொண்டு குப்பை அரைக்கும் தொழிற்சாலையும், இப்பகுதியில் கொண்டுவந்தால் மேலும் சுகாதாரச் சீர்கேடு ஏற்படும் என அப்பகுதி மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
எனவே, 40 ஆண்டுகளாக இப்பகுதியில் வசித்து வரும் பொது மக்களுக்கு அரசு பட்டா வழங்க வேண்டுமெனவும், காலியாக உள்ள புறம்போக்கு நிலத்தில் மக்களுக்கு பயனுள்ள வகையில் சிறுவர் பூங்கா, நியாய விலைக் கடை, ஆரம்ப சுகாதார நிலையம் போன்றவற்றை அமைக்க அரசு முன்வர வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: நடு ரோட்டில் வெட்டிக் கொலை...! வெளியான சிசிடிவி காட்சிகள்...