நாடு முழுவதும் 144 தடை உத்தரவு அமல்படுத்தியுள்ள நிலையில், பொதுமக்களின் அன்றாட தேவைகள் பாதித்திடாத வகையில் உழவர் சந்தைகள் இயக்கப்படும் என தமிழ்நாடு முதலமைச்சர் பழனிசாமி அறிவித்து, அதற்கான பணிகளை உடனடியாக மேற்கொள்ள உத்தரவிட்டார்.
இதனையடுத்து சேலம் மாநகர பகுதிகளில் செயல்படும் உழவர் சந்தைகளை தற்காலிக இடமாற்றம் செய்து மாநகராட்சி நிர்வாகம் அறிவித்திருந்தது. சூரமங்கலம் உழவர் சந்தையும், பால் கடைகள், காய்கறிச் சந்தை ஆகியன புதிய பேருந்து நிலையத்தில் தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ளது.
அதற்கான முன்னேற்பாட்டு பணிகளை சேலம் மாநகராட்சி பணியாளர்கள் மேற்கொண்டு வருகின்றனர். மேலும் பொதுமக்கள் ஒருவருக்கொருவர் இடைவெளிவிட்டு நிற்பதற்கான வட்டங்கள் வரைந்து கடைகள் அமைப்பதற்கான இடங்களை தூய்மை செய்துவருகின்றனர்.
இதேபோல அஸ்தம்பட்டி உழவர் சந்தை, அக்ரஹாரம் ஆற்றோரம் காய்கறிச் சந்தை, அம்மாபேட்டை உழவர் சந்தை, தாதகாப்பட்டி உழவர் சந்தை, கருங்கல்பட்டி காய்கறிச் சந்தை, கொண்டலாம்பட்டி காய்கறிச் சந்தைகள் ஆகியன விசாலமான பகுதியில் செயல்படுவதற்கான பணிகளை மாநகராட்சி பணியாளர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.