சேலம் - சென்னை இடையே 10 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் எட்டுவழிச் சாலை அமைக்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான தமிழ்நாடு அரசு முடிவெடுத்தது. அத்துடன், கடந்த 2019ஆம் ஆண்டில் அதற்கான அறிவிப்பு மற்றும் அரசாணையை வெளியிட்டது. இதற்காக சேலம், தருமபுரி, காஞ்சிபுரம் உள்ளிட்ட 5 மாவட்டங்களில் சுமார் 1,900 ஹெக்டேர் நிலங்களைக் கையகப்படுத்தும் பணிகளைத் தமிழ்நாடு அரசு தொடங்கியது.
இந்தத் திட்டத்தால் வேளாண் நிலங்களும், பல்லுயிர் காடுகளும் அழிக்கப்படுமெனக் கூறி நிலம் கையகப்படுத்துவதை நிறுத்த வேண்டுமென சேலம் உள்ளிட்ட 5 மாவட்ட விவசாயிகள் போராட்டத்தில் இறங்கினர்.
மேலும், எட்டுவழிச் சாலை திட்டத்தை தடை செய்யவேண்டுமென நில உரிமையாளர்கள், விவசாயிகள், பாமக, நாம் தமிழர் கட்சி, பூவுலகின் நண்பர்கள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் உள்ளிட்டோர் சார்பில் 50-க்கும் மேற்பட்ட வழக்குகள் சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்டிருந்தன.
இந்த மனுக்களை விசாரித்த உயர் நீதிமன்றம், கடந்த 2019ஆம் ஆண்டு ஏப்ரல் 8ஆம் தேதி தீர்ப்பு எட்டுவழி சாலை தொடர்பாக மத்திய, மாநில அரசுகள் பிறப்பித்த அறிவிப்பு, அரசாணை ஆகியவற்றை ரத்து செய்வதாக உத்தரவிட்டது.
சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து இந்திய நெடுஞ்சாலைத்துறை ஆணையம் சேலம் - சென்னை எட்டுவழிச் சாலை திட்ட இயக்குநர் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் கடந்த ஆண்டு மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கானது, நீதிபதிகள் கான்வில்கர், பி.ஆர். கவாய், கிருஷ்ண முராரி ஆகியோர் அடங்கிய அமர்வின் முன்பாக இன்று(டிச.8) காணொளி வாயிலான இறுதி விசாரணைக்கு வந்தது.
அப்போது, மத்திய அரசு மற்றும் எதிர்மனுதாரர் தரப்பு வாதங்களைக் கேட்டறிந்த நீதிமன்றம்,“சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு செல்லும். மேலும், இந்த திட்டத்துக்காக பொதுமக்களிடமிருந்து கையகப்படுத்தப்பட்டுள்ள நிலங்களை எட்டு வாரத்துக்குள் திருப்பி கொடுக்க வேண்டும்” என்று உத்தரவிட்டது.
உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை சிறிதளவு மகிழ்ச்சி அளிக்கிறது முழுமையாக ரத்து செய்து விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதுகாக்கப்படும் இந்த திட்டத்தை முழுமையாக கைவிட தமிழ்நாடு அரசு வழிவகை செய்யவேண்டும் இல்லையென்றால் எதிர்வரும் தேர்தலில் விவசாயிகள் இந்த ஆட்சியாளர்களுக்கு தக்க பாடம் புகட்டுவார்கள் என விவசாயிகள் எச்சரிக்கை
உச்ச நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை சேலம், காஞ்சிபுரம், திருவண்ணாமலை உள்ளிட்ட 5 மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகள் வரவேற்றுள்ளனர். அந்த வகையில், சேலம் ராமலிங்கபுரம் பகுதியில் எட்டுவழிச் சாலை திட்டத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் பட்டாசு வெடித்து கைகள் தட்டி கொண்டாடினர் .
இது குறித்து கருத்து தெரிவித்த விவசாயி மோகனசுந்தரம், “இந்த தீர்ப்பு சிறிதளவு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும் இந்தத் திட்டத்தை முழுமையாக ரத்து செய்யப்பட்டால் விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதுகாக்கப்படும். எனவே, தமிழ்நாடு அரசு விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் வகையில் செயல்பட வேண்டும். இத்திட்டத்தை கைவிட வலியுறுத்த வேண்டும். விவசாயிகளின் துயரத்தை புரிந்து கொள்ளாமல் இந்த சாலையை மீண்டும் அமைக்க முற்பட்டால், விவசாயிகளின் மிகப்பெரிய போராட்டத்தால் இந்த ஆட்சியே மாற்றப்படும். எனவே எதிர்வரும் தேர்தலில் எட்டுவழிச் சாலை திட்டத்தை ரத்து செய்ய வேண்டுமென தேர்தல் அறிக்கையாக வெளியிட வேண்டும். இல்லை என்றால் எந்த ஒரு காலகட்டத்திலும் ஒரு இடத்தில்கூட அதிமுக வெற்றி பெற முடியாது" என கூறினார்.
இதையும் படிங்க : ஆயுர்வேத மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்வதா? - எதிர்க்கும் அலோபதி மருத்துவர்கள்