சேலம் மாவட்டத்திற்குள் மட்டும் பயணம் செய்ய இ-பாஸ் தேவையில்லை எனவும்; கரோனா வைரஸ் நோய்த்தொற்று ஏற்படாமல், பொதுமக்கள் தங்களைப் பாதுகாத்துக்கொள்ள, தேவையற்ற பயணங்களை முற்றிலும் தவிர்க்க வேண்டும் எனவும்; கட்டாயம் முகக்கவசம் அணிந்து, தகுந்த இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும் எனவும் சேலம் மாவட்ட ஆட்சியர் சி.அ.ராமன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது; 'முதலமைச்சர் கரோனா நோய்த் தொற்றிலிருந்து பொது மக்களைப் பாதுகாத்து, அவர்களுக்குத் தேவையான நிவாரணங்களை வழங்கி, முனைப்புடன் செயல்பட்டு வருகிறார். இந்தியா முழுவதும் கரோனா வைரஸ் நோய்த்தொற்றைத் தடுப்பதற்காக தேசியப் பேரிடர் மேலாண்மைச்சட்டத்தின்கீழ், மத்திய அரசு, ஊரடங்கு உத்தரவை கடந்த மார்ச் 24ஆம் தேதி முதல் அமல்படுத்தியது.
இந்நிலையில் தமிழ்நாடு அரசும் மாநிலம் முழுவதும் ஊரடங்கை அமல்படுத்தி வருகின்றது. இதைத்தொடர்ந்து, கரோனா தொற்றின் நிலைமையை கருத்தில் கொண்டு, மக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு சில தளர்வுகளுடன் ஜூன் 30 வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், ஜூன் 25 முதல் ஜூன் 30 வரை வாகனப் போக்குவரத்தில் மண்டல முறை தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டு, அதற்குப் பதில் மாவட்டத்தில் மட்டும் பயணம் செய்ய இ-பாஸ் தேவையில்லை என்றும், மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல இ-பாஸ் பெற வேண்டும் என்றும் அரசு முடிவு செய்துள்ளது.
மேற்குறிப்பிட்ட காலத்தில், பொதுப்பேருந்து போக்குவரத்து மாவட்டங்களுக்குள் மட்டும் செயல்படும். கரோனா நோய்ப் பரவலைத் தடுக்க, பொதுமக்கள் தங்களின் ஒத்துழைப்பினை வழங்கி, நோய்ப்பரவலைத் தடுக்க அரசுடன் இணைந்து செயல்பட வேண்டுமென கேட்டுக்கொள்ளப்படுகிறது' எனத் தெரிவித்தார்.