உத்தரப்பிரதேச மாநிலம், அயோத்தியில் வரும் 5ஆம் தேதி ராமர் கோயில் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற உள்ளது. இந்த அடிக்கல் நாட்டு விழாவில் கலந்துகொள்வதற்காக, தமிழ்நாட்டிலிருந்து ஏராளமான பாஜக தலைவர்கள், பிரமுகர்கள், தொண்டர்கள் அயோத்திக்குச் செல்ல உள்ளனர்.
இந்நிலையில் சேலம் மரவனேரி தொகுதியில் உள்ள மாதவம் வளாகத்தில் ராமர் கோயிலை கட்ட வெள்ளிச் செங்கல் அனுப்பி வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் 17.400 கிலோ கிராம் எடையுள்ள 12 லட்சம் ரூபாய் மதிப்புள்ள இந்த வெள்ளிச் செங்கலை மாதவத்தில் உள்ள வெற்றி விநாயகர் கோயிலில் வைத்து, சிறப்புப் பூஜை செய்து, சேலம் பாஜகவினர் அயோத்திக்கு அனுப்பி வைத்தனர்.
இந்நிகழ்வில் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்ட பாஜக பிரமுகர்கள் கலந்துகொண்டனர். இதுகுறித்து செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய சேலம் மாவட்ட பாஜக முன்னாள் மாவட்டத் தலைவர் கோபிநாத் கூறுகையில்,"இந்து மதத்தினரின் நீண்ட நாள் கனவான ராமர் கோயில் அயோத்தியில் விரைவில் கட்டப்பட உள்ளது. இதற்கான அடிக்கல் நாட்டு விழா வரும் 5ஆம் தேதி அயோத்தியில் நடைபெறுகிறது. இதில் பிரதமர் மோடி உள்ளிட்ட பாரதிய ஜனதா கட்சியின் மூத்தத் தலைவர்கள் ஏராளமானோர் கலந்து கொள்கின்றனர்.
ராமர் கோயில் கட்டுமானப் பணியில் சேலம் பாஜகவினரின் பங்களிப்பை உணர்த்தும் வகையில், சேலத்தைச் சேர்ந்த வெள்ளி நகை பட்டறைத் தொழிலாளர்கள் உருவாக்கிய 17.400 கிலோ கிராம் எடையுள்ள வெள்ளி செங்கல் இன்று (ஜூலை 31) சிறப்புப் பூஜை செய்யப்பட்டு, அனுப்பி வைக்கப்படுகிறது. வரும் 3ஆம் தேதி அயோத்திக்கு கொண்டுசெல்லப்படும் இந்த வெள்ளிச் செங்கல், அங்கு உள்ள அயோத்தி நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்படும்" என்றார்.
இதையும் படிங்க... அயோத்திக்குச் செல்லும் ராமேஸ்வரம் கடற்கரை மணல்!