சேலம்: மேச்சேரி ஒன்றியத்திற்குட்பட்ட ஓலைப்பட்டி ஊராட்சியிலுள்ள ஒன்றிய தொடக்கப்பள்ளியில் அக்.2ஆம் தேதி கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் பொதுமக்கள் திரளாகக்கூடி, தங்களது குறைகளைத் தெரிவித்தனர். மேலும் ஊர் நலனைக் காக்கும் வகையில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
அப்போது, பழனி என்பவர் தனது வீட்டில் தண்ணீர் குழாய் இணைப்புத் துண்டிக்கப்பட்டது குறித்து கேள்வி எழுப்பினார். இதில், அவருக்கும் ஊராட்சிமன்ற நிர்வாகிகளுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
இதனால், ஆவேசமடைந்த பழனி கடந்த உள்ளாட்சித் தேர்தலில் ஓட்டு போடுவதற்காக, தனக்கு கொடுத்த 2ஆயிரத்து 500 ரூபாய் பணத்தைக் கூட்டத்தில் வீசி எறிந்துவிட்டுச் சென்றார்.
பணத்தை வீசிய வீடியோ வைரல்
குடிநீர் இணைப்புத் துண்டிக்கப்பட்டது தொடர்பான மோதலில், வாக்காளர் ஒருவர் உள்ளாட்சித் தேர்தலில் ஓட்டுப் போட கொடுத்தப் பணத்தை அனைவரின் முன்பும் பகிரங்கமாக தூக்கி எறிந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் நேரத்தில் அரசியல் பரபரப்பை ஏற்படுத்தக்கூடிய இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.
மேலும், பணம் தூக்கி வீசப்பட்ட விவகாரம் குறித்து மாவட்ட ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: போதையில் திமுக தொண்டர் நாம் தமிழர் கொடியைக் கிழித்து ரகளை!