சேலம்: தமிழ்நாடு தழுவிய அளவில் மாபெரும் தோல்வியைத் தழுவி இருந்தாலும் கொங்கு மண்டலமும், அதில் அடங்கியுள்ள சேலம் மாவட்டமும் எடப்பாடி பழனிசாமியை அதிமுகவின் தலைமைக்கு தகுதியாக்கியிருக்கிறது என்று அதிமுக தொண்டர்கள் ஆறுதல் அடைந்துள்ளனர்.
சேலம் நெடுஞ்சாலை நகர் இல்லத்தில் தேர்தல் முடிவுகள் குறித்து எடப்பாடி பழனிசாமி சேலம் அதிமுக முக்கிய நிர்வாகிகள், பழைய புதிய எம்எல்ஏக்கள் ஆகியோருடன் மே 2ஆம் தேதி முதல் ஆலோசனை நடத்தினார். சேலம் வடக்கில் தோற்றது குறித்து வேட்பாளர் ஜி.வெங்கடாசலம், அஸ்தம்பட்டி சரவணன் ஆகியோரிடம் தீவிரமாக விசாரித்து, அடுத்த தேர்தலில் குறைகளை சரி செய்துகொள்ள அவர்களிடம் வலியுறுத்தியுள்ளார் எடப்பாடி.
தேர்தலில் வெற்றியும், தோல்வியும்
இந்தத் தேர்தலில் தமிழ்நாடு தழுவிய அளவில் அதிமுக கூட்டணி 75 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. சேலம் மாவட்டத்தில் அதிமுக 8 தொகுதிகளிலும், கூட்டணி கட்சியான பாட்டாளி மக்கள் கட்சி 2 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது. மாவட்டத்தில் மொத்தமுள்ள 11 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் சேலம் வடக்கு தொகுதியை மட்டும் அதிமுக, திமுகவிடம் கடந்த 2016 தேர்தலை போலவே வெற்றியைப் பறிகொடுத்துள்ளது.
களப்பணி இன்னும் தேவை
தேர்தல் முடிவுகள் வெளியாகி புதிய அரசு அமைந்துள்ள நிலையில் எடப்பாடி பழனிசாமியின் அடுத்தக்கட்ட அரசியல் நகர்வுகள் என்னவாக இருக்கும் என்று சேலம் அதிமுக புறநகர் மாவட்ட விவசாய அணி செயலாளர் செல்லதுரையிடம் கேட்டோம். அவர் கூறுகையில், "சேலம் மாவட்டம் இந்த முறையும் அதிமுகவின் கோட்டை என்பதை மக்கள் நிரூபித்து இருக்கிறார்கள். அதற்காக அதிமுக சேலம் மாவட்ட வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறது.
அதே நேரத்தில் சேலம் வடக்கு தொகுதி மட்டும் திமுக வெற்றி பெற்றுள்ளது சேலம் அதிமுகவினரை சுயபரிசோதனை செய்ய வைத்துள்ளது. அரசு ஊழியர்கள் நிறைந்த சேலம் வடக்கு திமுக வசம் செல்வது இயல்பு தான் என்றாலும், 2020 கரோனா ஊரடங்கு காலத்தில், அண்டை மாநிலங்களில் 7 நாட்கள் சம்பளம் பிடித்தம் செய்யப்பட்டது. ஆனால் எங்கள் முதலமைச்சர் எடப்பாடியார் தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு முழு சம்பளத்தைக் கொடுத்தார். அதைக்கூட அவர்கள் நினைத்துப்பார்க்கவில்லை என்பது அதிர்ச்சியாகயுள்ளது.
எங்களை பொறுத்தவரை மக்கள் அதிமுகவை புறக்கணிக்கவில்லை. வாக்குகளை நிறையவே வழங்கி உள்ளனர். கூட்டணி அமைத்தத்தில் இன்னும் கவனம் செலுத்தி இருக்கவேண்டும், தென் மாவட்டங்களில் அதிமுக முக்கிய தலைவர்கள் 'கிரவுண்ட் ஒர்க்' இன்னும் கூடுதல் ஆர்வத்துடன் செய்து இருக்கவேண்டும் என்ற ஆதங்கம் எங்களுக்கு இருக்கிறது." என்று தெரிவித்தார்.
அமமுக இணைப்பு
முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் சேலம் சென்று எடப்பாடி பழனிசாமியை சந்தித்து பேசினார். பின்னர் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், "அதிமுக அடைந்துள்ள தோல்விக்கு பல காரணங்கள் உள்ளன. கட்சிகளை குறை சொல்ல விரும்பவில்லை. அதே நேரத்தில் மக்கள் எங்களை புறக்கணிக்கவில்லை. அமமுக எங்களுடன் இணைவது குறித்து தலைமைதான் முடிவு செய்ய வேண்டும். தொண்டர்கள் விருப்பத்தைக் காட்டிலும் தலைமை விருப்பமே முக்கியம். தலைமை சொல்வதை தொண்டர்கள் ஏற்போம்" என்று அதிமுக எடுக்கவேண்டிய அடுத்தக்கட்ட நகர்வுகளை வெளிப்படையாகவே குறிப்பிட்டார்.
எதிர்க்கட்சி தலைவர் யார்?
அதே போல முன்னாள் அமைச்சர் வளர்மதி எடப்பாடியை சந்தித்த பிறகு , "இந்தத் தேர்தலில் அதிமுக பெற்ற வெற்றிக்கு முழுமையான காரணம் எடப்பாடி பழனிசாமி மட்டுமே. அவரின் உழைப்பு ஆளுமை மட்டுமே இவ்வளவு தொகுதிகளை பெற முடிந்தது. அவர் எதிர்க்கட்சித் தலைவராக ஆவார் என்பது 7ஆம் தேதி நடக்கும். அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் முடிவு செய்யப்படும். நாங்கள் எதிர்க்கட்சியாக பணியாற்றுவது என்பது புதியதல்ல. தேர்தலில் வெற்றி தோல்வியை கடந்த 1972ஆம் ஆண்டு முதல் பார்த்துக்கொண்டு வருகிறோம். வெற்றி தோல்வி என்பது தேர்தலில் சகஜமான ஒன்று" என்று தெரிவித்தார்.
அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளராக உள்ள எடப்பாடி பழனிசாமி எதிர்க்கட்சித்தலைவராக ஆவதற்கு அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் இடம் தருவாரா என்ற கேள்வியும் கட்சிக்குள் எழுந்துள்ளது.
இதுவரை தமிழ்நாட்டில் இருந்த முதலமைச்சர்கள் அனைவருமே சென்னையில்தான் வசித்துவந்துள்ளனர். முதலமைச்சரின் அதிகார மையம் அனைத்துமே சென்னை தான் என்பது வழக்கமாக இருந்தது. எம்.ஜி.ஆர். ராமாவரம் தோட்டத்திலும், கருணாநிதி கோபாலபுரத்திலும், ஜெயலலிதா போயஸ் கார்டனிலும் வசித்ததால் அந்த இடங்கள் அதிமுக, திமுக வினரின் அரசியல் தலைமை இடங்களாகவும் அதிகார மையங்களாகவும் இருந்தன.
மாற்றம் ஒன்றே மாறாதது
இதனை மாற்றி முதன்முறையாக அதிகார மையத்தை சென்னையில் இருந்து சேலத்திற்கு கொண்டுவந்த பெருமைக்கு சொந்தக்காரர் எடப்பாடி பழனிசாமிதான். கடந்த 4 ஆண்டுகளில் சட்டப்பேரவைக் கூட்டம் நடக்கும் மாதங்களைத் தவிர மற்ற மாதங்களில், குறைந்தபட்சம் மாதம் 3 முறை சேலம் வந்து, 2 அல்லது 4 நாட்கள் தங்கி அரசுப்பணியை தொடருவதை வாடிக்கையாகவே எடப்பாடி பழனிசாமி வாடிக்கையாக வைத்திருந்தார்.
அவர் வரும்பொழுதெல்லாம் சேலம் மாவட்டத்தில் நிச்சயம் ஏதாவது ஒரு அரசு நிகழ்ச்சி இருக்கும். ஆய்வுக்கூட்டம் இருக்கும். ஒரு முதலமைச்சர் சென்னையை தாண்டி அதிக நாட்கள் தமது பதவிக்காலத்தில் வெளி மாவட்டத்தில் இருந்தது எடப்பாடி பழனிசாமி மட்டுமே.
இனி நெடுஞ்சாலை நகர் இல்லம் முதலமைச்சரின் அதிகார மையமாக இருக்காது என்பது சேலம் அதிமுகவினருக்கு சோர்வைக்கொடுத்துள்ளது என்பது உண்மையே. ஆனால் இதுவும் மாறும் என்கிறார்கள் சேலம் அதிமுக முக்கிய நிர்வாகிகள். மாற்றம் ஒன்றே மாறாதது என்பது அதிமுகவுக்கும் பொருந்தும்தானே.