சேலம்: மூலக்காட்டில் வீரப்பனுக்கு மணிமண்டபம் கட்டப்படும் என உறுதிபட தெரிவித்துள்ளார் முத்துலட்சுமி வீரப்பன்.
சந்தன கடத்தல் வீரப்பன் 2004ஆம் ஆண்டு அக்டோபர் 18ஆம் தேதி தமிழ்நாடு அதிரடி படையால் சுட்டுக் கொல்லப்பட்டார். அதனையடுத்து ஆண்டுதோறும் அக்டோபர் 18ஆம் தேதி அவரது சமாதி அமைந்துள்ள மேச்சேரி மூலக்காடு பகுதியில், ஏராளமான பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவது வழக்கம்.
அதன்படி இந்த ஆண்டும் இன்று (அக்டோபர் 18) வீரப்பன் சமாதியில் அஞ்சலி செலுத்தவும் நினைவு தினத்தை அனுசரித்து பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தவும், வீரப்பனின் மனைவி முத்துலட்சுமி ஏற்பாடுகளை செய்துவருகிறார்.
இச்சூழலில், அவரிடம் சில கேள்விகளை முன்வைத்து உரையாடினோம். அப்போது மனம் திறந்து பேசிய முதுலட்சுமி வீரப்பன், "எனக்கு நேர்ந்த கொடுமைகள் வேறு எந்த பெண்ணுக்கும் நடக்கக்கூடாது. அதற்காகவே தற்போது நான் அரசியலில் இறங்கி உள்ளேன். பதவிக்காகவோ அல்லது வேறு எதற்காகவோ அரசியலில் நான் இறங்கவில்லை.
அண்ணன் வேல்முருகன் மீது நம்பிக்கை...
தமிழ்நாட்டில் இப்போது உள்ள அரசியல்வாதிகளில், தமிழக வாழ்வுரிமை கட்சி நிறுவனர் வேல்முருகன் சிறந்த போராளியாக இருப்பதால், அவருடன் இணைந்து பயணிக்கிறேன். அவரும் எனக்கு கட்சியில் மாநில மகளிர் அணி தலைவர் பதவியை வழங்கி பெண்களின் நலனுக்காக குரல் கொடுக்க ஊக்கமளித்தார்.
எனது மகள் வித்தியா பாரதிய ஜனதா கட்சியில் இணைந்திருப்பது அவரது முடிவு. அவர் அரசியலுக்கு வரும் நோக்கத்தில் இல்லை. அவரை யாரோ பேசி, அரசியல் செய்து, அந்தக் கட்சியில் இணைத்துள்ளனர். மற்றபடி எனக்கும் அவருக்கும் எந்த அரசியல் தொடர்பும் இல்லை. தற்போது தமிழ்நாட்டில் வீரப்பன் பெயரை வைத்து கதை எழுதுவதும், திரைப்படம் எடுப்பதும், இணைய தொடர்கதை, யூடியூப் ஆகியவற்றில் பதிவிடுவதும் வழக்கமாக இருக்கிறது.
இது போன்ற நபர்களை தடுப்பதும் அவர்கள் மீது வழக்கு தொடுப்பதுமே எனக்கு முழு நேர வேலையாகிவிடுகிறது. வீரப்பன் என்ற பெயரை பயன்படுத்தி சினிமா எடுத்தால், கதைகள் எழுதினால் பணம் கிடைக்கிறது என்பதை மட்டுமே அவர்கள் நோக்கமாக வைத்துள்ளனர். அவர்கள் மீது நான் தொடர்ந்து வழக்குகளை தொடுப்பேன். நீதிமன்றத்தில் எனக்கு நீதி கிடைக்கும்.
வீரப்பனுக்கு மணிமண்டபம் நிச்சயம்...
எனது கணவர் அடக்கம் செய்யப்பட்டுள்ள மூலக்காடு பகுதியில் மணிமண்டபம் கட்டுவதற்கு குரல் கொடுக்க அரசியல் பலம் வேண்டும் என்பதினாலயே, தமிழக வாழ்வுரிமை கட்சியில் இணைந்து செயல்பட்டு வருகிறேன். ஏனெனில் ஆண்டுதோறும் மூலக்காடு வீரப்பன் சமாதி வரும் நபர்கள் அங்கிருந்து மண் எடுத்துச் சென்று அதை தங்கள் இல்லங்களில் வைத்து வணங்கி வருகிறார்கள்.
அதனால் அவர்களுக்கு நம்பிக்கை கிடைப்பதாக கூறுவதைக் கேட்கும் போது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியாக இருக்கிறது. நிச்சயம் மூலகாட்டில் மணிமண்டபம் அமைக்கப்படும்" என்று தெரிவித்தார்.