சேலம்: ஆத்தூர் ரவுண்டானா பகுதியில் முன்னாள் முதலமைச்சர்கள் காமராஜர், எம்ஜிஆர் சிலைகளும், பெரியார் சிலையும் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், நேற்று (ஆகஸ்ட் 31) அதிகாலை எம்ஜிஆர் சிலையின் கைப்பகுதி, சிலை அமைக்கப்பட்டுள்ள பீடம் ஆகிய பகுதிகள் சேதமடைந்ததாகத் தகவல் பரவியது.
இதனையடுத்து அந்தப் பகுதிக்கு விரைந்துவந்த அதிமுகவினர் சிலை சேதமடைந்தது குறித்து ஆத்தூர் காவல் துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர்.
காவல் துறையினர் நடத்திய விசாரணையில், அதிகாலை ஆத்தூர் ரவுண்டானா வழியாக சேலம் நோக்கிச் சென்ற அடையாளம் தெரியாத வாகனம், எம்ஜிஆர் சிலையின் பீடத்தின் மீதுள்ள ஏணியின் மீது மோதி விபத்து ஏற்படுத்திவிட்டு, நிற்காமல் சென்றது தெரியவந்தது.
தொடர்ந்து ஆத்தூர் நகர காவல் துறையினர் எம்ஜிஆர் சிலையைச் சேதப்படுத்திவிட்டு தப்பியோடிய அடையாளம் தெரியாத வாகனத்தை சிசிடிவி கேமராவில் பதிவான காட்சியை வைத்து கண்டுபிடிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.