மதுரை மாவட்டத்தில், ஊரக அரசு ஆரம்ப சுகாதார மையங்கள் உட்பட 47 அரசு ஆரம்ப சுகாதார மருத்துவ மனைகள் உள்ளன. ஆரம்ப சுகாதார மையங்களை பிரசவத்திற்காக நாடும் பெண்கள் மாலை மற்றும் இரவு நேரங்களில் நாடும்போது, மருத்துவர்கள் இல்லாத காரணத்தால் தனியார் மருத்துவமனைகளுக்கோ அல்லது அரசு ராசாசி மருத்துவமனைக்கோ அனுப்பி வைக்கப்படுகின்றனர். இதனால், உரிய நேரத்தில் சிகிச்சை கிடைக்காததால் பலர் உயிரிழக்கும் அவலம் ஏற்பட்டுள்ளது. இதனையறிந்த சிவகங்கையைச் சேர்ந்த ரமேஷ்குமார் என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் பொது நல வழக்கினைத் தாக்கல் செய்திருந்தார்.
அதில், "மதுரை அரசு ராசாசி மருத்துவமனையில் பல மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் வந்து சிகிச்சை பெற்றுச் செல்லும் நிலையில், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் மருத்துவர்கள் இல்லை என்பதற்காக நோயாளிகள், கர்ப்பிணிகள் ராசாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்படும் காரணத்தால், அம்மருத்துவமனை ஊழியர்களுக்கு கூடுதல் பணிச்சுமை ஏற்படுகிறது. மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட 31 அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவ அலுவலர், செவிலியர்கள், உதவியாளர்கள், மருந்தாளுநர்கள் உள்ளிட்ட பணியிடங்கள் காலியாகவே உள்ளன.
இதனால், ஏழை மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். ஆகவே, மதுரை மற்றும் தமிழ்நாடு முழுவதுமுள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் காலியாக உள்ள மருத்துவர்கள், மருத்துவ அலுவலர்கள், செவிலியர்கள், மருந்தாளுநர்கள், உதவியாளர்கள் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்பவும், அங்கு 24 மணி நேரமும் மருத்துவ சேவைக் கிடைப்பதை உறுதிப்படுத்தவும் உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்" என்று குறிப்பிட்டிருந்தார்.
இன்று இந்த வழக்கானது நீதிபதிகள் துரைசுவாமி, கிருஷ்ணவள்ளி அமர்வில் விசாரணைக்கு வந்தது. விசாரணையில், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் இரவு நேரங்களில் எத்தனை மருத்துவர்கள், செவிலியர்கள், மருந்தாளுநர்கள் பணியில் உள்ளனர் என்பது குறித்து தமிழ்நாடு சுகாதாரத்துறைச் செயலர் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஜனவரி முதல் வாரத்திற்கு ஒத்திவைத்தனர்.
இதையும் படிங்க;