"தமிழ்நாடு முழுவதும் குறைந்த கட்டணத்தில் சட்டக் கல்வியை ஏழை எளிய குடும்பங்களைச் சேர்ந்த மாணவ மாணவியர் படிக்கும் நோக்கில், சட்டப்பேரவையில் புதிய சட்டக்கல்லூரி குறித்த அறிவிப்பாணை வெளியிடப்பட்டது. இதையடுத்து, இன்று சேலம் மணியனூர் பகுதியில் புதிய அரசு சட்டக் கல்லூரி திறக்கப்பட்டுள்ளது.
இதேபோல் நாமக்கல், தேனி ஆகிய மாவட்டங்களிலும் அரசு சட்டக் கல்லூரி தொடங்கப்பட்டு உள்ளது. மேலும் புதிய சட்ட கல்லூரிகள் தொடங்குவதற்கு தனி அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். சேலம் அரசு சட்டக்கல்லூரி உள் கட்டமைப்பு வசதிக்காக 9.52 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

சேலம் - கோவை தேசிய நெடுஞ்சாலையில் சேலம் அரசு சட்டக்கல்லூரிக்கான கட்டடம் புதியதாக இந்த ஆண்டே கட்டி முடிக்கப்படும். தமிழ்நாடு அரசின் தொடர் முயற்சியினால் உச்சநீதிமன்ற தீர்ப்புகள் தமிழில் வெளியிடப்பட்டு வருகிறது. சென்னை உயர்நீதிமன்றத்தின் பரிந்துரையை ஏற்று நீதித்துறையில் தமிழ்நாட்டில் மின் ஆளுமை முறை தொடங்கும் மின்னணு முத்திரைத்தாள் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.
நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடிக்க ஏதுவாக, நீதித்துறையில் 1188 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட்டு உள்ளன. சேலம் மாநகர் பகுதியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ.948 கோடி மதிப்பில் பல்வேறு திட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. எதை சொல்கிறோமோ அதை நிறைவேற்றும் அரசாக ஜெயலலிதா வழியிலான அதிமுக அரசு செயல்பட்டு வருகிறது.
சேலம் மாவட்டத்தில், தமிழ்நாட்டில் எந்த நகரங்களிலும் இல்லாத வகையில் அதிக அளவிலான மேம்பாலங்கள் கட்டப்பட்டுள்ளன. விரைவில் சீலநாயக்கன்பட்டி பகுதியில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் மேம்பாலம் கட்டப்படும். தமிழ்நாட்டில் முதல் முறையாக மிக பிரம்மாண்டமான புறநகர் பேருந்து நிலையம், சேலம் அரபிக் கல்லூரி அருகே 66 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்படவுள்ளது.
வெளிநாடுகளில் இருக்கும் நகரங்களைப் போல சேலம் மாநகரத்தை மாற்றிக் காட்டும் அளவிற்கு புதிய திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன" என்று தெரிவித்தார். இந்த விழாவில் தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் சி.வி. சண்முகம், வருவாய்த் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், சட்டத்துறை அரசு செயலர், தருமபுரி, கோயம்புத்தூர் அரசு சட்ட கல்லூரி முதல்வர்கள் உள்ளிட்ட அரசு உயர் அலுவர்கள் கலந்து கொண்டனர்.