எடப்பாடி தொகுதில் போட்டியிடும் முதலமைச்சரும், அதிமுக வேட்பாளருமான பழனிசாமி இன்று காலை தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். அதனைத் தொடர்ந்து மாலையில், எடப்பாடி தொகுதிக்குட்பட்ட நங்கவள்ளி, செட்டிமாங்குறிச்சி, ஜலகண்டபுரம் உள்ளிட்டப் பகுதிகளில் திறந்த வேனில் நின்று மக்களிடையே அவர் பரப்புரை மேற்கொண்டார்.
அப்போது பேசிய பழனிசாமி, ”நெசவாளர்கள் வங்கியில் வாங்கிய கடன் ரூ.1 லட்சம் வரை தள்ளுபடி செய்யப்படும். நெசவாளர் நல வாரியம் அமைக்கப்படும். கைத்தறிக்கு ஜிஎஸ்டி வரியை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும். நெசவு நூல் விலை உயர்வு கட்டுப்படுத்தப்படும். தமிழகத்தில் 17,662 கிராமங்களில் இணையதள வசதி ஏற்படுத்தி தரப்படும். இன்னும் ஏராளமான திட்டங்களை அதிமுக அரசு வழங்கவுள்ளது.
ஆனால், திமுக தலைவர் ஸ்டாலினுக்கு நாட்டைப் பற்றியோ, மக்களைப் பற்றியோ, தொகுதியை பற்றியோ ஒன்றும் தெரியாது. அதனால்தான் அவருடன் புள்ளி விவரத்துடன் விவாதிக்க நான் தயாரா உள்ளேன். ஆனால், விவாதத்திற்கு வர அவருக்கு திரணியுள்ளதா?.
ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை யாரோ எழுதித் கொடுத்ததை எடுத்துச் சென்று ஆளுநரிடம் கொடுத்த திமுக தலைவர் ஸ்டாலின் முதலமைச்சராக வந்தால் நாடு வீணாகி விடும். அவர் சொல்லும் பொய்க்கதைகளை நம்ப மக்கள் தயாராக இல்லை. 234 தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம் என்று கூறி வரும் ஸ்டாலினுக்கு சவால் விடுகிறேன். எடப்பாடி தொகுதியில் திமுகவை ஜெயிக்க வைத்துக் காட்டுங்கள்" என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: என்னை எதிர்ப்பவர்கள் டெபாசிட் இழப்பார்கள்! - டிடிவி.தினகரன்