சேலம்: மாநகரத்திற்கான குற்றத் தடுப்பு நடவடிக்கை குறித்த ஆய்வுக் கூட்டம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் டிஜிபி சைலேந்திரபாபு கலந்துகொண்டு குற்றங்களை களைய எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை வழங்கினார்.
மேலும் குற்ற நடவடிக்கைகளில் ஈடுபட்ட குற்றவாளிகளை விரைந்து கண்டுபிடித்த காவல்துறை குழுக்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கி வாழ்த்துகளை தெரிவித்தார். முன்னதாக டிஜிபி சைலேந்திரபாபு செய்தியாளர்களிடம் கூறுகையில், "கஞ்சா கடத்தல் முற்றிலும் தடுக்க தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதற்காக மாநில எல்லைகளில் கூடுதலாக சோதனை சாவடிகள் அமைக்கப்பட உள்ளன.
கஞ்சா கடத்தலை தடுக்க காவல்துறையினர் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். சைபர் கிரைம் போலீஸார் பல்வேறு வழக்குகளில் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். சைபர் குற்றங்களில் வடமாநிலத்தைச் சேர்ந்தவர்கள் அதிகம் ஈடுபட்டுள்ளனர். இவர்களை கைது செய்ய அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது" என்றார்.
இதில் சேலம் மாநகர காவல் ஆணையர் நஜ்மல் ஹோதா, சேலம் சரக காவல்துறை துணைத் தலைவர் பிரவீன்குமார் அபிநபு , சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீ அபினவ், தர்மபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கலைச்செல்வன், நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சாய்சரண் தேஜஸ்வி, கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சரத்குமார் தாகூர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க: 'பாலியல் குற்றங்களில் ஈடுபடுவோர் மீது குண்டர் சட்டம் பாயும்' - விருதுநகர் எஸ்பி மனோகர் எச்சரிக்கை