மாம்பழத்திற்கு பெயர் போன மாவட்டம் சேலம் என்று தான் பெரும்பான்மையினருக்கு தெரியும். சேலம் மாவட்டத்திற்கு இன்னொரு அடையாளமும் இருக்கிறது. அது தான் "வெண்பட்டு வேட்டி". சேலத்தில் தயாராகும் வெண்பட்டு வேட்டிகள் உலக அளவில் பிரசத்தி பெற்றவை. இந்த வெண்பட்டு வேட்டி உற்பத்தி இந்திய அரசின் புவிசார் குறியீட்டையும் பெற்றுள்ளது.
பட்டு நூல் எடுத்தல், சுற்றுதல், முறுக்குதல், சலவை செய்தல், சாயம் ஏற்றுதல், நெய்தல் போன்ற 12 வகையான படிநிலைகளில் வெண்பட்டு வேட்டிகள் தயார் செய்யப்படுகின்றன. ஒரு வெண்பட்டு வேட்டி தயாரிப்பதற்கு குறைந்தபட்சம் பத்து நாட்கள் ஆகும். இந்த வேட்டி முழுக்க முழுக்க கைத்தறி முறையிலேயே தயாராவது இன்னொரு சிறப்பம்சம்.
இங்து தயாரிக்கப்படும் வெண்பட்டு வேட்டி சேலம் மாவட்டம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களுக்கும் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. வெள்ளி ஜரிகை வேட்டி, கோர்வை வேட்டி, அங்கவஸ்தரம் போன்ற பல ரகங்கள் இங்கு தயார் செய்யப்பட்டாலும் இதற்கெல்லாம் மூலப்பொருளாக இருப்பது பட்டுக்கூடுகளும் இதிலிருந்து எடுக்கப்படும் பட்டு பாவும் தான். இந்த பட்டு பாவு தமிழ்நாட்டில் பெருமளவு கிடைக்காத காரணத்தால் வெளி மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிறது.
இது குறித்து தெரிவித்த நெசவாளர்கள், "வழக்கமாக, சீனாவிலிருந்து 40 விழுக்காடு பட்டுக்கூடுகள் தமிழ்நாட்டில் இறக்குமதி செய்யப்பட்டன. தற்போது கொரோனோ வைரஸ் பாதிப்பு காரணமாக, அங்கிருந்து வெறும் 5 விழுக்காடு பட்டுக்கூடுகள் மட்டுமே இறக்குமதி செய்யப்படுகின்றன. இந்நிலையில் அதற்கு மாற்றாக கர்நாடகா, ஆந்திரப்பிரதேச மாநிலங்களில் இருந்து அதிக விலையில் பட்டுக்கூடுகள் இறக்குமதி செய்யப்படுகின்றன. இதனால் வேட்டியின் விலையை ஏற்ற வேண்டிய கட்டாயமும் ஏற்படுகிறது" என்றனர்.
கொரோனா வைரஸ் தொற்றால் உடலுக்கு தான் பாதிப்பு என்றால் உடைக்கும் பாதிப்பு என்ற நிலை தற்போது நிலவி வருகிறது. அதிக செலவு செய்து வேட்டியை செய்வதால் வேட்டியின் விலையையும் உயர்த்த வேண்டும் என்று நெசவாளர்கள் கோரிக்கை வைக்கின்றனர்.
இதையும் படிங்க; 'களியும் கறிக்குழம்பும்' - எளிய மக்களின் வலிமையான உணவு