சேலம்: சேலம் மாவட்டத்தில் 10க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் நடிகர் விஜய் நடித்துள்ள 'பீஸ்ட்' திரைப்படத்தின் சிறப்பு காட்சி இன்று (ஏப்.13) வெளியானது. விஜய் ரசிகர்கள் திரையரங்கு முன்பு பட்டாசு வெடித்து மேளதாளத்துடன் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
பீஸ்ட் திரைப்படத்தின் சிறப்பு காட்சி வெளியீட்டிற்காக 100க்கும் மேற்பட்ட காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். இந்நிலையில், சேலம் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள ஏ.ஆர்.ஆர்.எஸ் மல்டிபிளக்ஸ் திரையரங்கில் திரையில் நடிகர் விஜய் தோன்றியதும் திரையரங்கிற்கு உள்ளே பட்டாசு வெடித்ததால் பரபரப்பு நிலவியது.
இடைவேளையின் போது திரையரங்குகளில் இருந்த கண்ணாடியை உடைத்த ரசிகர்களால் திரையரங்கு பணியாளர்கள் அதிர்ச்சியடைந்தனர். பின்னர், காலை 7 மணி காட்சிக்கு ஒளிபரப்பப்பட்டது. அப்போது, திரையரங்கில் இருந்த கண்ணாடியை உடைத்த ரசிகர்கள் கீழே நின்று கொண்டிருந்த திரையரங்கு பணியாளர்கள் மீது விழுந்தது.
அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த காவல் துறையினர் திரை அரங்கிற்கு உள்ளே சென்று கண்ணாடியை உடைத்த விஜய் ரசிகரை ரத்தம் சொட்டசொட்ட அடித்து இழுத்து வந்தனர். பின்னர் கைது செய்யப்பட்ட விஜய் ரசிகரை சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
'பீஸ்ட்' திரைப்படத்தின் முதல் காட்சியின் போது விஜய் ரசிகர்கள் ரகளையில் ஈடுபட்டதால் சேலத்தில் உள்ள அனைத்து திரையரங்குகளிலும் காவல் துறை பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது.