சேலம்: சேர்வராயன் மலைத்தொடரில் ’ஏழைகளின் ஊட்டி’ என்றழைக்கப்படும் ஏற்காடு சுற்றுலாத் தலம் அமைந்துள்ளது.
இந்நிலையில், ஏற்காட்டை சுற்றிப் பார்க்க புதுச்சேரியிலிருந்து நேற்று (ஆக.22) காலை 17 பேர் மேக்ஸி கேப் டூரிஸ்டர் வேனில் சென்றனர். அவர்கள் அனைவரும் ஏற்காட்டை சுற்றிப் பார்த்துவிட்டு குப்பனூர் மலைப்பாதை வழியாக திரும்பியுள்ளனர்.
இவர்களது வாகனம், வாழவந்தி அடுத்துள்ள ராமர் கோயில் அருகில் சென்று கொண்டிருந்த நிலையில், எதிரில் இருசக்கர வாகனம் வந்ததைக் கண்ட வேன் ஓட்டுநர் முத்துக்குமார், அவ்வாகனத்தின் மீது மோதாமல் இருக்க வேனை திருப்பியுள்ளார்.
அப்போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த வேன், நடுரோட்டில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில், வாகனத்தின் உள்ளே இருந்த கடலூரைச் சேர்ந்த ரமேஷ் (25) என்பவர் வேனின் அடியில் மாட்டிக்கொண்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
விபத்தில் சிக்கியவர்களுக்கு சிகிச்சை
மேலும், வேனில் இருந்த 14 பேருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த சுகாதார ஊழியர்கள், அவசர ஊர்தியின் மூலம் காயமடைந்தவர்களை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.
அங்கு அவர்களுக்கு முதலுதவி அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்த ஏற்காடு காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: கொடைக்கானலுக்கு சுற்றுலா வந்த கேரள இளைஞர்கள்: வேன் கவிழ்ந்து விபத்து