சேலம்: மேட்டூர் அனல் மின் நிலையத்தில் தீ விபத்து ஏற்பட்டதால் மின் உற்பத்தி பாதிக்கும் சூழல் உருவாகியுள்ளது.
மேட்டூர் அனல் மின் நிலையத்தில் இரண்டு பிரிவுகள் செயல்பட்டு வருகின்றன. முதல் பிரிவில் தலா 210 மெகாவாட் திறன் கொண்ட நான்கு அலகுகள் மூலம் 840 மெகாவாட்டும் , இரண்டாவது பிரிவில் 600 மெகாவாட் திறன் கொண்ட மற்றொரு பிரிவும் செயல்பட்டு வருகிறது.
இவற்றின் மூலம் 1,440 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. இன்று (மே.18) அதிகாலை மேட்டூர் அனல் மின் நிலைய முதல் யூனிட்டான 840 மெகாவாட் நிலையத்தில் உள்ள கன்வேயர் பெல்ட் பகுதியில் உராய்வு காரணமாக தீப்பற்றியது. பின்னர் தீ மளமளவென பரவி கன்வேயர் பெல்ட் முழுவதும் பற்றிக் கொண்டது. இதுகுறித்து தகவலறிந்த மேட்டூர் அனல்மின் நிலைய தீயணைப்பு படையினரும், ஊழியர்களும் சுமார் இரண்டு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.
இந்த தீ விபத்து காரணமாக. கொதிகலன்களுக்கு செல்லும் நிலக்கரி தடைபட்டதால் உடனடியாக மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது. மேலும் முதல் பிரிவில் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது.
இவ்விபத்து காரணமாக பல லட்ச ரூபாய் மதிப்பில் சேதம் ஏற்பட்டிருக்கும் என்று அனல் மின் நிலைய அலுவலர்கள் தெரிவித்தனர். இதுதொடர்பாக நடத்தப்படவுள்ள ஆய்வுக்குப் பிறகு சேதத்தின் முழு விபரம் தெரியவரும். அதேசமயம் விபத்தில் எவ்வித உயிரிழப்புகளும் ஏற்படவில்லை.
இதேபோல் கடந்த 2012ஆம் ஆண்டு பெரும் தீவிபத்து ஏற்பட்டு கோடிக்கணக்கான ரூபாய் இழப்பு ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: பெருந்தொற்று காலத்தில் நம்பிக்கையை கொடுக்கும் தன்னார்வலர்கள்!