சேலம் கலைஞர் மாளிகையில் சேலம் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஆர். பார்த்திபன் மற்றும் சேலம் மேற்கு மாவட்டச் செயலாளர் எஸ்.ஆர். சிவலிங்கம் ஆகியோர் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது பேசிய எஸ்.ஆர். சிவலிங்கம், "சேலத்தில் நடைபெறவுள்ள உள்ளாட்சித் தேர்தலில் அரசு அலுவலர்கள் தொடர்ந்து ஆளும் கட்சிக்கு ஆதரவாக செயல்பட்டு வருகின்றனர். மகுடஞ்சாவடி ஊராட்சி ஒன்றியத் தேர்தல் நடத்தும் அலுவலர் ஆளுங்கட்சிக்கு ஆதரவாகச் செயல்படுவதால் அவரை மாற்றவேண்டும். இதுகுறித்து, ஆதாரத்துடன் தேர்தல் ஆணையத்திற்கு மனு அளித்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
அரசுப் பள்ளிகளில் வாக்கு எண்ணிக்கை நடத்த போதுமான வசதிகள் இல்லாததால் அனைத்து அடிப்படை வசதிகளும் கூடிய கல்லூரிகளை தேர்வு செய்து, அங்குதான் வாக்கு எண்ணிக்கையை நடத்த வேண்டும். சேலம் மாவட்டத்தில் பதற்றமான வாக்குச்சாவடிகளில் தேவையான கண்காணிப்பு ஏற்பாடுகளையும் செய்ய தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும்" என்றார்.
மேலும், சேலம் மாவட்டத்தில் தோல்வி பயத்திலேயே ஆளும் கட்சியினர் தொடர்ந்து, தேர்தல் விதிமுறைகளை மீறுவதாக குற்றஞ்சாட்டிய அவர், தேர்தலில் ஆளும் கட்சியினர் விதிமுறைகளை மீறினால் ஏற்படும் சட்ட ஒழுங்கு பிரச்னைக்கு திமுக ஒருபோதும் பொறுப்பு அல்ல எனவும் தெரிவித்தார்.
இதையும் படிங்க: 15ஆவது ஆண்டில் சுனாமி தினம் - ஆழிப்பேரலை தந்த ஆறாத வடு