மக்கள் குறைதீர் மனுக்களை சேலம் நாடாளுமன்ற உறுப்பினர் பார்த்திபன், மாவட்ட ஆட்சியரிடம் நேரில் வழங்கினார். இதுதொடர்பாக சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் திமுகவின் சேலம் மேற்கு பொறுப்பாளர் எஸ் ஆர் சிவலிங்கம் அளித்த பேட்டியில், “தமிழ்நாட்டில் டெங்கு கொசு உற்பத்தி ஆகிற முதல் இடமே சேலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை தான்.
இந்த எடப்பாடி ஆட்சியில், அரசு மாவட்ட மருத்துவமனை டெங்கு கொசு உற்பத்தியாகும் மோசமான நிலையில் இருக்கிறது. சேலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நேரில் ஆய்வு செய்த போது, அங்கு அடிப்படை வசதிகள் இல்லாத சூழல் இருக்கிறது. அது தொடர்பாக ஆய்வு அறிக்கையை மாவட்ட ஆட்சியரிடம் அளித்திருக்கிறோம்.
நாள்தோறும் சுமார் 8,000 பேர் சிகிச்சை பெற்று செல்லும் இந்த மருத்துவமனையில் அடிப்படை வசதிகள் இல்லை. மேலும் நோய் குணமாகி உயிரோடு வீடு திரும்புவோமா என்று நோயாளிகள் பயப்படும் சூழல் உள்ளது. திமுக சார்பில் 1026 மக்கள் குறைதீர் மனுக்கள் மாவட்ட ஆட்சியரிடம் வழங்கப்பட்டுள்ளது. ரோகிணி ஆட்சியராக இருந்தபோது மனுக்கள் மீது உடனுக்குடன் நடவடிக்கை எடுத்தது போல் தற்போதைய ஆட்சியரும் உடனுக்குடன் நடவடிக்கை எடுப்பார் என எண்ணுகின்றேன்” என்று தெரிவித்திருக்கிறார்.