சேலம் மாவட்டம், எடப்பாடியில் புதிய மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதி மன்றங்களைச் சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி தஹில் ரமணி திறந்து வைத்தார். இந்த விழாவில் கலந்து கொண்டு தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சிறப்புரையாற்றினார்.
அப்போது, " 908 வழக்குகள் எடப்பாடி நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. 406 புதிய நீதி மன்றங்கள் உருவாக்க அரசு அனுமதி வழங்கியுள்ளது. நீதிமன்றங்களுக்கு 15 புதிய கட்டடங்கள் கட்ட அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. 1265 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது " - என்றார்.
அதேபோல், ’சேலம் மாவட்டத்தில் தான் அதிக வழக்குகளுக்குத் தீர்வு காணப்பட்டு உள்ளது. சமரசம் மூலம், வழக்குகளுக்குத் தீர்வு காணப்பட்டுள்ளது. இங்கு பல்வேறு நீதிமன்றங்கள் 2011ஆம் ஆண்டு முதல் தொடங்கப்பட்டுள்ளது. நீதிமன்றங்களில் மின்னணு முத்திரைத்தாள் முறை உச்ச நீதிமன்ற அறிவிப்பை ஏற்று, தற்போது நம் மாநிலத்திலும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. விரைவில் தமிழ்நாட்டில் பாலியல் வழக்குகளை விசாரிக்கத் தனி நீதிமன்றங்கள் அமைக்க, மாநில அரசு பரிந்துரை செய்யும்’ என்று தெரிவித்துள்ளார்.
இந்நிகழ்ச்சியில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சுந்தரேஷ் இளந்திரையன் மற்றும் மாநில சட்டத்துறை அமைச்சர் சிவி சண்முகம், சேலம் மாவட்ட தலைமை நீதிபதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.