சேலம்: தமிழ்நாட்டில் பல்வேறு குற்ற வழக்குகளில் தண்டனை பெற்றவர்களும், விசாரணைக் கைதிகளும் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இதனால் சிறைவாசிகளுடைய குழந்தைகளின் கல்வி, பாதுகாப்பு உள்ளிட்ட அடிப்படை உரிமைகள் கேள்விக்குறியாகி உள்ளன. எனவே சிறைவாசிகளின் குழந்தைகளுக்கு அடிப்படை உரிமைகள் கிடைக்க குழந்தைகள் நல ஆணையம் நடவடிக்கையைத் தொடங்கியுள்ளது.
அதன்படி முதற்கட்டமாக சேலம் மத்திய சிறை, பெண் கைதிகள் கிளைச்சிறை ஆகிய இடங்களில், தமிழ்நாடு மாநில குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் உறுப்பினர் ராம்ராஜ் தலைமையிலான குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர்.
சிறைவாசிகளை நேரில் சந்தித்த இக்குழுவினர், அவர்களின் கோரிக்கைகளையும், அவர்களது குழந்தைகளின் தற்போதைய நிலை குறித்தும் கேட்டறிந்தனர்.
குறிப்பாக சேலம் சிறைகளில் உள்ள சிறைவாசிகள், தங்கள் குழந்தைகளுக்கு முறையாக உதவித் தொகைகள் கிடைக்கப்படுவதில்லை என்றும், அதேபோல் சாதிச் சான்றிதழ் பெறுவதில் சிக்கல் இருப்பதாகவும் பல புகார்கள் வந்துள்ளதாவும், இந்தப் புகார்களின் பேரில் விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஆய்வுக்குப் பின் குழுவினர் தெரிவித்தனர்.
தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த ராம்ராஜ், கரோனா காலத்தில் தமிழ்நாட்டில் மட்டுமின்றி, நாடு முழுவதுமே பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களும், குழந்தைத் திருமணங்களும் அதிகரித்துள்ளதாகத் தெரிவித்தார். மேலும், குழந்தைத் திருமணங்களை முற்றிலும் தடுக்க ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ள குழுக்களுக்கு முழு அதிகாரம் கிடைக்கும் வகையில் தனிச்சட்டம் வகுக்க வேண்டும் என்றும் கூறினார்.
மேலும், சேலம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நடந்த குழந்தைகள் விற்பனை தொடர்பாக ஆய்வு நடத்தி அரசுக்கு ரகசிய அறிக்கை தரப்பட்டுள்ளதாகவும், அதன் அடிப்படையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார்.